பலர் பதறினர்: கத்தாரில் ஈரானிய ஏவுகணையைக் கண்ட சிங்கப்பூரர்

1 mins read
5e72b60c-ad6b-49e0-8ace-9e7e46000282
ஹா‌ஷிம் சிடெக் (இடது), கத்தார் வானில் காணப்பட்ட ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகள். - படங்கள்: ஹா‌ஷிம் சிடெக் / ராய்ட்டர்ஸ்

ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியபோது கத்தாரில் இருந்த சிங்கப்பூரர் ஒருவர் தலைநகர் டோஹாவில் கடைத்தொகுதி ஒன்றில் இருந்தார்.

ஹஷிம் சிடெக், 64, தனது பேரனின் பிறந்தநாளைக் கொண்டாட கத்தார் சென்றிருக்கிறார். அப்போது கத்தாரில் உள்ள அல் உடெய்ட் ஆகாயப் படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

அதுதான் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள ஆகப் பெரிய அமெரிக்க ராணுவத் தளமாகும்.

“திடீரென சிலர் வாகன நிறுத்துமிடத்துக்கு வழிவிடும் கதவை நோக்கி ஓடினர்,” என்று திரு ஹ‌ஷிம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். வெளியே சென்ற பிறகு வானில் இரண்டு ஏவுகணைகளை வேறு இரண்டு ஏவுகணைகள் அழித்ததைக் கண்டதாக திரு ஹ‌ஷிம் தெரிவித்தார்.

“செயலி மூலம் நாங்கள் அழைத்த ஊபர் காருக்கு விரைந்தோடினோம்,” என்று கூறிய அவர், “பலர் ஏற்கெனவே வெளியே சென்றிருந்தனர். அவர்கள் பதறியபடி வானில் ஏவுகணைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்,” என்றும் குறிப்பிட்டார். திரு ஹ‌ஷிமும் அவரது குடும்பத்தாரும் காரில் ஏறிக்கொண்டு அவரின் மறுமகளின் அடுக்குமாடி வீட்டுக்குச் சென்றனர்.

டென்னிஸ் பயிற்றுவிப்பாளரான திரு ஹ‌ஷிமும் அவரின் மனைவியும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) டோஹா சென்றனர். அவரின் மகன், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிகிறார். தனது பெற்றோர் திட்டமிட்டதற்கு முன்பே நாடு திரும்ப மகன் ஏற்பாடு செய்துவருகிறார்.

திரு ஹ‌ஷிமும் அவரின் மனைவியும் புதன்கிழமை (ஜூன் 25) சிங்கப்பூர் திரும்ப எண்ணம் கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்