நிலப் போக்குவரத்து ஆணையம் மார்ச் மாதம் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளில் 308 தனிநபர் நடமாட்டம் சார்ந்த குற்றங்கள் கண்டறியப்பட்டன.
முறையற்ற வகையில் சைக்கிளோட்டியோரும் விதிமுறைகளுக்கு எதிரான நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தியோரும் அந்நடவடிக்கைகளில் குறிவைத்து தடுக்கப்பட்டனர்.
இதன் விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
விதிகளைப் பின்பற்றாத 100 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகரும் இயந்திரம் (கியர்) பொருத்தப்பட்ட சைக்கிள்கள், புதுப்பிக்கப்பட்ட கூடுதல் எடைகொண்ட நடமாட்டச் சாதனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உள்ளடங்கும். அவற்றின் புகைப்படங்களை ஆணையம் வெளியிட்டது.
ஜூன் மாதம் முதல் தனிப்பட்ட காரணங்களால் மருத்துவச் சான்று பெற்றவர்கள் மட்டுமே தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த முடியும் என்ற சட்டம் நடப்புக்கு வரும்.
பொதுப் பாதைகளில் அச்சாதனங்களின் உச்ச வேக வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டர் என்பதில் இருந்து மணிக்கு 6 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும்.
மேலும் 2029ஆம் ஆண்டுக்குள் அனைத்து நடமாட்டச் சாதனங்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முறையற்ற வகையில் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் go.gov.sg/report-am என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

