கிழக்கு ஜோகூர் நீரிணையில் அவசரகாலத்தில் உடனடியாக உதவி வழங்க பொங்கோல் நார்த்ஷோர் வட்டாரத்தில் புதிய தீயணைப்பு நிலையம் 2027ஆம் ஆண்டுக்குள் கட்டப்படவுள்ளது.
அதற்காக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மிகவிரைவில் பயணம் செய்யக்கூடிய தீயணைப்புக் கலன்களையும் மற்ற வகையான வாகனங்களையும் சாதனங்களையும் அந்த நிலையம் கொண்டிருக்கும். அவற்றின் உதவியுடன் அவசரகாலத்தில் கிழக்கு ஜோகூர் கடல் பகுதியை 45 நிமிடங்களில் அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும், தற்போது இயங்கும் பொங்கோல் தீயணைப்பு நிலையம், லோயாங் கடல் தீயணைப்பு நிலையம் ஆகிய இரண்டுடனும் ஒருங்கிணைந்து செயலாற்றும்.
தீயணைப்பு நிலையம் சிறியதாக அமைந்தாலும் அவசர காலத்தில் உடனடியாக ஆரம்பகட்ட உதவிகள் வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து செயலாற்றக்கூடிய பசுமை வளங்களைப் பாதுகாக்கும் சூரியத் தகடுகளையும் தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய இயந்திரங்களையும் அங்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,
கடலில் கப்பல்களிலும் படகுகளிலும் ஏற்படக்கூடிய தீச்சம்பவங்கள், வேதிப்பொருள்கள் கசிவு, மீட்புப் பணிகள் போன்றவற்றைக் கையாளும் திறன்கொண்ட அதிவிரைவு தீயணைப்புக் கலன் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஜோகூர் நீரிணையில் அவசரகால சம்பவங்கள் நடக்கக்கூடிய இடங்களை 45 நிமிடங்களில் சென்றடைய புதிய தீயணைப்பு நிலையம் உதவும். தற்போது அப்பகுதியில் சில இடங்களையே அந்த காலக்கெடுவுக்குள் தீயணைப்புப் படையினரால் அடையமுடிகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் நீரிணை வட்டாரத்தில், உபின், தெக்கோங், சிலேத்தார் தீவுகளும் உள்ளடங்கும். அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகள் உள்ளன. தெக்கொங் தீவில் 2024ஆம் ஆண்டில் தீச் சமபவம் நிகழ்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுங்கை தெங்கா மீன்பண்ணையில் தீவிபத்து நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கவை.
நிலப் பகுதியில் எற்படும் தீ விபத்துகளையும் எதிர்கொள்ள தீயணைப்பு வாகனம், மோட்டர்சைக்கிள், மருத்துவ உதவி வாகனம் ஆகியன அங்கு நிறுத்திவைக்கப்படும்.
அதன்வழியாக,பொங்கோல் நார்த்ஷோர் குடியிருப்பாளர்களுக்கு, அவசரகாலத்தின்போது குடிமைத் தற்காப்புப் படை விரைந்து வந்தடைய தேவைப்படும் நேரம் 11 நிமிடங்களில் இருந்து 8 நிமிடமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

