அடுத்த பொதுத் தேர்தலில் மரின் பரேட் குழுத்தொகுதியின் எல்லைகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.
ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மரின் பரேட் குழுத்தொகுதியில், மெக்பர்சன் தனித்தொகுதி முழுமையாகச் சேர்க்கப்படுகிறது. அதோடு, மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் உள்ள வாக்களிப்பு வட்டாரம் ஒன்று மரின் பரேடில் சேர்க்கப்படுகிறது.
மேலும், சை சீ வீடமைப்பு வட்டாரங்களிலும் சிக்லாப் தனியார் குடியிருப்பு வட்டாரங்களிலும் உள்ள வாக்களிப்பு வட்டாரங்கள் மரின் பரேடிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாற்றப்படுகின்றன.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் உள்ள சில வாக்களிப்பு வட்டாரங்களையும் மரின் பரேடுக்கு மாற்றுமாறு தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியிட்ட தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. பிடாடாரியில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் (வீவக) திட்டங்கள் கட்டப்பட்டதைத் தொடர்ந்து பொத்தோங் பாசிர் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்ததே, அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டதற்கான காரணம்.
இதனையடுத்து மரின் பரேட் குழுத்தொகுதி, மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி என்று பெயர் மாற்றம் காண்கிறது. இக்குழுத்தொகுதி உள்ளடக்கும் இடங்களை நன்கு பிரதிபலிக்க பெயர் மாற்றப்படுவதாகத் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு தெரிவித்தது.
புதிய மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் 131,493 வாக்காளர்கள் இருப்பர். இந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது மரின் பரேட் குழுத்தொகுதியில் இருந்த 139,738 வாக்காளர்களை விடக் குறைவாகும்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் மரின் பரேட் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவியது. அங்கு மக்கள் செயல் கட்சி, 57.76 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வென்றது. மரின் பரேடில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் பாட்டாளிக் கட்சி போட்டியிட்டது.
இவ்வாண்டுப் பொதுத் தேர்தலிலும் இங்கு கடும் போட்டி நிலவும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இம்முறையும் பாட்டாளிக் கட்சி போட்டியிடும் என்பது எதிர்பார்ப்பு.
தொடர்புடைய செய்திகள்
2020 தேர்தலில் மரின் பரேடில் மக்கள் செயல் கட்சி அணியில் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின் இடம்பெற்றார். தகாத உறவு வைத்துக்கொண்டதன் காரணமாக அவர் 2023ஆம் ஆண்டு பதவி விலக நேரிட்டது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கின் மேற்பார்வையில் சை சீ, சிக்லாப்பிலிருந்து வாக்களிப்பு வட்டாரங்களை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மரின் பரேட் குழுத்தொகுதியில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனிதவள அமைச்சர் டான் சீ லெங், நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங், தென்கிழக்கு வட்டார மேயர் முகம்மது ஃபாஹ்மி அலிமான் ஆகியோரும் திரு டான் சுவான் ஜின்னின் பணிகளை நிறைவேற்ற உதவினார்கள்.