மரின் பரேட்: பராமரிப்பாளர்களுக்கும் இளையர்களுக்கும் புதிய திட்டங்கள் அறிமுகம்

4 mins read
15049349-a2f2-439c-85c5-f4e494f5f52f
கம்போங் உபி சமூக மன்றத்தில் நடைபெற்ற எஸ்ஜி 60 நிகழ்ச்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. (இடமிருந்து) டாக்டர் சூ பெய் லிங், தேசிய வளர்ச்சி, உள்துறை துணையமைச்சர் ஃபை‌‌ஷால் இப்ராகிம், கோ ஸி கீ, லிம் பியவ் சுவான், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், பிரதமர் லாரன்ஸ் வோங், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், சியா கியன் பெங், டின் பெய் லிங், ஃபஹ்மி அலிமான், டயானா பாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரின் பரேடில் மூத்தோர், நோய்வாய்ப்பட்டோர், உடற்குறையுள்ளோர் உள்ளிட்டோரின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் இளையர்களைப் பணிக்குத் தயார்ப்படுத்தும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தரவும் ஏதுவாக புதிய திட்டங்கள் அறிமுகம் கண்டுள்ளன.

கம்போங் உபி சமூக மன்றத்தில் நடைபெற்ற எஸ்ஜி 60 தொடர்பான விழாவில் இவ்விரு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

இவ்விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனிதவள அமைச்சர் டான் சீ லெங், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், ஃபஹ்மி அலிமான் (கேலாங் செராய்), லிம் பியாவ் சுவான் (மவுண்ட்பேட்டன்), டின் பெய் லிங் (மெக்பர்சன்), நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வோங், மரின் பரேட் தாம் வளர்ந்த வட்டாரம் என்றும் காலப்போக்கில் இது பெருமாற்றங்களைச் சந்தித்தது என்றும் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதையும் அவர் சுட்டினார்.

உலகம் சவால்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “கடந்த 60 ஆண்டுகளாக கொவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஒன்றிணைந்து நாம் சந்தித்தவற்றிலிருந்து வலிமை பெற்று மேலும் முன்னோக்கிச் செல்வோம்,” என்றார்.

மேற்கண்ட திட்டங்கள் குறித்து ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக விளக்கப்பட்டது.

ரொக்கம், போக்குவரத்து, ஓய்வுக்கால உதவி ஆகியவற்றுக்காக $1,600 வரை வழங்கப்படும். ஏறத்தாழ 2,800 குடும்பங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.

குடும்பத்தினரின் எண்ணிக்கையையும் வருமானத்தையும் பொறுத்து $700 வரை ரொக்கமும் மருத்துவமனைப் போக்குவரத்துச் செலவுகளுக்கு ஆதரவளிக்க $300 வரை கிராப் பற்றுச்சீட்டுகளும் $600 வரை ஓய்வு நிதியும் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு 2026 ஏப்ரலில், மேம்படுத்தப்பட்ட இல்லப் பராமரிப்பு மானியம் செயல்பாட்டுக்கு வரும் வரையில் இடைக்கால ஆதரவாக இத்திட்டம் செயல்படும்.

இத்திட்டம் 2025 ஏப்ரல் முதல் 2026 ஜனவரி வரை தொடரும். மரின் பரேட் குடியிருப்பாளர்கள் இத்திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைப் பரிசீலிக்க நான்கு வாரங்கள் எடுக்கும்.

தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு 2026 ஜனவரி 31ஆம் தேதி வரை மானியம் வழங்கப்படும்.

பராமரிப்பாளர்கள் பேசப்படாத நாயகர்கள் என்றும் அவர்களின் சுய நன்மைக்காக நேரம் ஒதுக்க, அவர்களின் மேலுள்ள சில சுமைகள் குறைய வேண்டும் என்றும் அமைச்சர் டான் தெரிவித்தார்.

மற்றொரு திட்டமான தொழில்துறை ஈடுபாட்டுத் திட்டம், இளையர்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கும் தொழில் பயிற்சிகளை ஏற்படுத்தித் தரும். 16 முதல் 25 வயது வரையுள்ள இளையர்கள் கல்வி, ஆர்வத்துக்கேற்ப இரு வாரம் முதல் மூன்று மாதம் வரையிலான வேலைப் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவர்.

இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளதாக அமைச்சர் டான் சொன்னார்.

பிற திட்டங்கள்

ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வு. (இடமிருந்து) தேசிய வளர்ச்சி, உள்துறைத் துணையமைச்சர் ஃபை‌‌ஷல் இப்ராகிம், சியா கியன் பெங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், டின் பெய் லிங், சூ பெய் லிங்.  
ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வு. (இடமிருந்து) தேசிய வளர்ச்சி, உள்துறைத் துணையமைச்சர் ஃபை‌‌ஷல் இப்ராகிம், சியா கியன் பெங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், டின் பெய் லிங், சூ பெய் லிங்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு ஜூ சியாட் சென்றாலும் அவ்வட்டார குடியிருப்பாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தால் பயனடைவார்கள் என்று அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.

மேலும், சமூக ஒன்றுகூடல்களுக்கான இரு புதிய இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.

அதில் ஒன்று, ‘நீர்வாழ் பகுதி’ எனும் கருப்பொருளில் அமைந்த சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி. மரின் பரேட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இது அமையவுள்ளது. மற்றொன்று, மரின் டெரஸ் பகுதியில் இடம்பெறவுள்ள உடற்பயிற்சிக்கும் வெளிப்புற ஒன்றுகூடல்களுக்குமான இடம்.

மரின் பரேட் குடியிருப்பாளர்களுக்காக ஓராண்டு காலத்துக்கு அறிமுகம் செய்யப்பட்ட வாகனச் சேவை (shuttle bus) முன்னோடித் திட்டம், அக்காலத்தைத் தாண்டியும் செயல்படும் என்று அமைச்சர் டான் சொன்னார்.

மரின் பரேட், மெக்பர்சன், மவுண்ட்பேட்டன் வட்டார மக்களுக்காகச் செயல்படும் இத்திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், செயல்பாடுகள் அளவிடப்பட்டு வழித்தடங்கள் தேவைக்கெற்ப மாற்றப்படும் என்று சொன்னார்.

மரின் பரேடில் புதுமுகங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மசெகவின் புதுமுகங்களான கோ ஸி கீ, மக்கள் கழக மாதர் ஒருங்கிணைப்பு மன்றம், ஃபெங்ஷான் மாதர் நிர்வாகக் குழுவுக்குத் தலைமையேற்றுள்ள வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் டயானா பாங் இருவரும் பங்கேற்றனர்.

நீ சூன் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய வளர்ச்சி, உள்துறை துணையமைச்சர் ஃபைஷால் இப்ராகிம், இத்திட்டம் குறித்த கலந்துரையாடலிலும் இந்நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இதில் தனது பங்களிப்பு குறித்துப் பேசிய அவர், கலாசார, மரபுடைமை முனையமான விஸ்மா கேலாங் செராயின் முதன்மை ஆலோசகர் என்பதால் அவ்வட்டாரத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

“இப்பகுதி மக்களை நன்கறிந்த முறையில் திட்டத்தில் பங்களிக்க அமைச்சர் டான் அழைத்தபோது, அனைவருடன் ஒன்றிணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பாகக் கருதினேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்