தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்ற ஆண்டு சிங்கப்பூரர்களிடையே திருமணம், குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை குறைவு

2 mins read
855da4de-21f2-4603-8bf3-3968d6abef8a
படம்: - பிக்சாபே

சென்ற ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.

குழந்தைப் பிறப்பு விகிதமும் குறைவாகப் பதிவாகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) வெளியான வருடாந்தர மக்கள்தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு, திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 24,355. இது முந்தைய ஆண்டைவிட 1.7 விழுக்காடு குறைவு.

2022ல் முன்னெப்போதும் இல்லாத அளவில் 24,767 சிங்கப்பூரர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்தபோதும் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததைவிட அதிகம் என்று பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் 2023 வரை, ஆண்டுக்குச் சராசரியாக 22,800 சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஒப்புநோக்க, 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை 24,000ஆக இருந்தது.

சென்ற ஆண்டு, மணமக்களின் வயதும் கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரர்களில் முதல் திருமணத்தின்போது மணமகனின் சராசரி வயது 30.7ஆகவும் மணமகளின் வயது 29ஆகவும் பதிவானது. 2013ல் இவை முறையே 30.1, 27.8 ஆகப் பதிவாயின.

சென்ற ஆண்டு பதிவான 36 விழுக்காட்டுத் திருமணங்களில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தோர்.

சிங்கப்பூரர்களுக்கு இடையிலான திருமணங்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு திருமணத்தில் வெவ்வேறு இனத்தவர் கைப்பிடித்தனர்.

25 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஒற்றையர் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டைவிடச் சென்ற ஆண்டு அதிகரித்தது.

இவ்வேளையில், சென்ற ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமையுடன் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5.1 விழுக்காடு குறைந்து 28,877ஆகப் பதிவாகியுள்ளது. 2022ல் இந்த எண்ணிக்கை 30,249ஆக இருந்தது.

சென்ற ஆண்டு சிங்கப்பூர்வாசிகளிடையே மொத்தக் கருவள விகிதம் 0.97ஆகப் பதிவானது. இது 1.0க்குக்கீழ் குறைந்தது இதுவே முதல்முறை.

இனவாரியாக, சீனர்களிடையே இது 0.81ஆகவும், இந்தியர்களிடையே 0.95ஆகவும் மலாய்க்காரர்களிடையே 1.65ஆகவும் பதிவானது.

கடந்த ஐந்தாண்டுகளில் வருடாந்தரச் சராசரி குழந்தைப் பிறப்பு விகிதம் 31,100. அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் அது 33,000ஆக இருந்தது.

முதல்முறை மகப்பேற்றை அடைந்த தாய்மாரின் சராசரி வயது 2023ல் 31.4 ஆண்டுகள். 2013ல் அது 30.2ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்