திரு ரவி மேனன் (படம்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவார்.
அப்போது அவர் 36 ஆண்டுகள் பொதுச் சேவையில் பணியாற்றி இருப்பார் என பொதுச் சேவைத் துறை கூறியது.
இவ்வாண்டு 59 வயது பூர்த்தியாகும் திரு மேனன் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஆக நீண்டகாலம் பணிபுரிந்திருக்கும் தலைவராவார். அவர் 2011ஆம் ஆண்டிலிருந்து தலைமைத்துவப் பொறுப்பில் இருந்துள்ளார்.
திரு மேனன், சிங்கப்பூரின் வெளிநாட்டு இருப்புகளை நிர்வகித்தார். நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். நிதித் துறையை மேற்பார்வையிட்டார். நாட்டை நிதி நடுவமாக உருவாக்கினார்.
திரு மேனனுக்குப் பிறகு தற்போது மனிதவள அமைச்சில் நிரந்தரச் செயலாளராக (மேம்பாட்டுப் பிரிவு) பொறுப்பு வகிக்கும் திரு சியா டெர் ஜியுன், 52, பொறுப்பேற்பார். அவர் 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2026 மே 31ஆம் தேதிவரை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுவார்.
திரு மேனன் 1987ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் தமது பணியைத் தொடங்கினார். கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் ஊழியர்[Ϟ]களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவளித்ததில் ஆணையம் மிக முக்கியப் பங்கு வகித்தது. நெருக்கடிக்குப் பிந்திய வலுவான பொருளியல் மீட்புக்கான அடித்தளத்தையும் அது அமைத்தது.
அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் தொழில் நிறுவனங்களுக்கு சம்பளச் சலுகைகள், குடும்பங்களுக்கு ரொக்கப் பணமாற்றம், எதிர்காலத்திற்குப் பயிற்சி ஆகியவையும் அடங்கும்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை முக்கியமாக நிதிக் கொள்கையைச் சார்ந்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் மெதுவடைவுக்கு ஏற்ப ஆணையம் அதன் நாணயக் கொள்கையைத் தளர்த்தியது.
சிங்கப்பூருக்கு மின்னிலக்க வங்கிமுறையை அறிமுகப்படுத்தியதில் தாம் ஆற்றிய பங்கிற்காக திரு மேனன் பெரிதும் பாராட்டு பெற்றார்.

