சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பில் மாற்றம் இல்லாதபோதும் மொத்தப் பணவீக்கத்துக்கான முன்னுரைப்பை ஆணையம் குறைத்துள்ளது. பணவீக்கம் தொடர்பான நெருக்கடி தளர்வதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது.
நாணய மதிப்பில் மாற்றம் இல்லை என்று ஜூலை 26ஆம் தேதி, ஆணையம் அறிவித்தது.
இந்த ஆண்டின் (2024) பிற்பாதியில் சிங்கப்பூர்ப் பொருளியல் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது கூறியது.
இந்த ஆண்டு முழுவதற்குமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று கருதப்படுவதாக ஆணையம் சொல்லிற்று.
முன்னதாக, அந்த விகிதம் 1 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்திருந்தது.
இவ்வேளையில், மொத்தப் பணவீக்கம் 2 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்துள்ளது. முன்னர் அது 2.5 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடாகப் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
அண்மை மாதங்களில் தனியார் போக்குவரத்துத் துறையில் பணவீக்க விகிதம் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாகப் பதிவானதை இது காட்டுவதாக ஆணையம் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் மாதத்துக்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டுத் தரவுகள், மொத்தப் பணவீக்கம் குறைந்ததைக் காட்டியதால், முன்னுரைப்பை மறுஆய்வு செய்வதாக ஜூலை 23ஆம் தேதி ஆணையம் கூறியிருந்தது.
மே மாதம் 3.1 விழுக்காடாகப் பதிவான மொத்தப் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 2.4 விழுக்காடாகக் குறைந்தது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த விகிதம் அது. புளூம்பெர்க் கருத்தாய்வில் ஆய்வாளர்கள் முன்னுரைத்திருந்த 2.7 விழுக்காட்டைவிடவும் அது குறைவு.
இவ்வேளையில், மூலாதாரப் பணவீக்கத்துக்கான முன்னுரைப்பில் மாற்றமில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. தனியார் தங்குமிடச் செலவையும் போக்குவரத்துக் கட்டணத்தையும் தவிர்த்து மதிப்பிடப்படும் வீடுகளின் செலவை இது குறிக்கிறது. மூலாதாரப் பணவீக்கம் 2.5 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் முதல்முறையாக ஜூன் மாதம், மூலாதாரப் பணவீக்கம் குறைந்து 2.9 விழுக்காடாகப் பதிவானது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த விகிதம் இது.
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிலும் அடுத்த ஆண்டும் மூலாதாரப் பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.

