பங்குச் சந்தைக்குப் புத்துயிரூட்ட மறுஆய்வுக் குழுவை அமைக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம்

2 mins read
c3dc00cb-adcc-4d5b-9645-337913f0df6b
மறுஆய்வுக் குழு, உள்ளூர்ப் பங்குச் சந்தை நிலவரத்தை மதிப்பிட்டு, அடையாளம் காணப்பட்ட சவால்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளைச் சோதிக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைக்குப் புத்துயிரூட்டும் நோக்கில் புதிய மறுஆய்வுக் குழுவை அமைத்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவித்துள்ளது.

தனியார், அரசாங்கத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதில் இடம்பெறுவர். திணறிக்கொண்டிருக்கும் பங்குச் சந்தைக்குப் புத்துயிர் தரும் நடவடிக்கைகளை அவர்கள் பரிந்துரைப்பர்.

நிதி இரண்டாம் அமைச்சரும் ஆணையத்தின் துணைத் தலைவருமான சீ ஹொங் டாட் இக்குழுவிற்குத் தலைமை தாங்குவார்.

ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன், தெமாசெக் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாகி தில்ஹான் பிள்ளை, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத் தலைவர் யூலீன் கோ, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைத் தலைவர் கோ பூன் ஹுவீ, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் லிம் மிங் யென், டைக்ஹவ் கேபிட்டல் முதலீட்டு நிறுவனத்தின் பங்காளியும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு நீல் பரேக் ஆகியோர் மறுஆய்வுக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

நிதி அமைச்சு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பர். 

இக்குழு, உள்ளூர்ப் பங்குச் சந்தை நிலவரத்தை மதிப்பிட்டு, அடையாளம் காணப்பட்ட சவால்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளைச் சோதிக்கும்.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றின் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அனைத்துலக அளவில் விரிவாக்கம் காணவும் ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் உத்திகளை அது பரிந்துரைக்கும்.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் மட்டும் பதிவு செய்யும் நிறுவனங்களோடு, சிங்கப்பூரிலும் மற்ற பங்குச் சந்தைகளிலும் அதே பங்குகளைப் பதிவு செய்யும் நிறுவனங்களையும் ஈர்க்கும் உத்திகள் பரிந்துரைக்கப்படும்.

மறுஆய்வுக் குழுவிற்கு ஆதரவாக இரண்டு பணிக்குழுக்கள் செயல்படும் என்று ஆணையம் கூறியது. நிறுவன, சந்தைப் பணிக்குழு, சந்தையில் நிலவும் சவால்களைச் சமாளித்தல், சந்தைக்குப் புத்துயிரூட்டுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். கட்டுப்பாட்டுப் பணிக்குழு, சந்தை வளர்ச்சி, முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரித்தல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும்.

இவற்றின் வாயிலாக, நிறுவன நிதி, சொத்து நிர்வாகம், சட்டச் சேவைகள், நிறுவன நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த அனுபவமிக்க வல்லுநர்கள், நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பர். மறுஆய்வுக் குழு 12 மாதங்களுக்குள் அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி ஊடகத்தினரிடம் பேசிய நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட், தற்போதைய நிலைமையை மேம்படுத்தவும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பதிவுசெய்ய நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

மறுஆய்வுக் குழு அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பை வரவேற்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் பேச்சாளர் கூறினார். அக்குழுவுடன் அணுக்கமாகப் பணியாற்றவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்