செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் அமைதியாக நடந்த கூட்டுப் பிரார்த்தனை

2 mins read
e71c585b-9f9f-4efd-8a1b-200def896477
திங்கட்கிழமை (டிசம்பர் 22) செயின்ட் ஜோசஃப் தேவாலயத்திலிருந்து - The Straits Times

செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் சந்தேகத்துக்குரிய பொருள் கண்டெடுக்கப்பட்ட மறுநாளான திங்கட்கிழமை (டிசம்பர் 22) காலை கூட்டுப் பிரார்த்தனை இயல்பாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு சுமார் 50 பேர் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

சந்தேகத்துக்குரிய பொருள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நிறுத்தப்பட்டிருந்தது. அந்தப் பொட்டலம் அபாயமற்றது என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

திங்கட்கிழமை அரை மணிநேரம் நீடித்த கூட்டுப் பிரார்த்தனையின் இறுதியில் பாதிரியார் பீட்டர் சாங், பொறுமையாக இருந்ததற்காகவும் நிலைமையைப் புரிந்துகொண்டதற்காகவும் பக்தர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வதந்திகளையோ உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பரப்பவேண்டாம் என்று அவர் எல்லா தேவாலயங்களின் பாதிரியார்களின் சார்பில் பக்தர்களைக் கேட்டுக்கொண்டார்.

பெரும்பாலான நாள்களில் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்றுவரும் ஓய்வுபெற்ற நெல்சன் குவா, 74, தொடர்ந்து தேவாலயத்துக்குப் போகப்போவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அதேவேளை, பண்டிகைக் காலத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றார் திரு குவா.

அதேபோல் பால் யப் என்பவர், இந்த விவகாரம் தன்னை பாதிக்கவில்லை என்றும் தொடர்ந்து தான் தினமும் தேவாலயத்துக்குப் போகப்போவதாகவும் கூறினார்.

“அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இங்கு சிறப்பான பாதுகாப்புக் குழுவும் உள்ளது,” என்றார் திரு யப்.

பிலிப்பீன்சைச் சேர்ந்த சசில் சொலானா எனும் 60 வயது மாது, தனது மகளைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வந்தபோது சமூக ஊடகங்கள், செய்திகள் மூலம் இச்சம்பவத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார். விநியோக ஓட்டுநரான அவர், இதுகுறித்து மகள் தன்னை எச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.

“நான் கூட்டுப் பிரார்த்தனைகளில் தொடர்ந்து பங்கேற்பேன்,” என்றார் திருவாட்டி சொலானா. தனது ஒன்பது நாள் பிரார்த்தனை நடவடிக்கை முடியும் வரை தொடர்ந்து செயின்ட் ஜோசஃப் தேவாலயத்துக்குப் போகப்போவதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படாததை நினைத்து நன்றியுடன் இருப்பதாக திருவாட்டி சொலானா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்