சிங்கப்பூரில் கூடுதலாக 250 பேரைப் பணியமர்த்த மாஸ்டர்கார்டு திட்டம்

சிங்கப்பூரில் கூடுதலாக 250 பேரைப் பணியமர்த்த மாஸ்டர்கார்டு திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 11:54 am

1 mins read

மாஸ்டர்கார்ட் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள தனது ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் 2029ஆம் ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 250 பேரைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவிக்கப்பட்ட அத்திட்டத்தால், 850க்கும் அதிகமாக உள்ள தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் தனது முதலாவது புத்தாக்க உன்னத நிலையத்தைத் தொடங்கிவைத்தபோது அந்நிறுவனம் இதனைத் தெரிவித்தது.

ஃபிரேசர் ஸ்திரீட்டில் இருக்கும் மாஸ்டர்கார்டு அலுவலகத்தில் அமைந்துள்ள அந்நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்ட 55க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

அதன் திறப்பு விழாவில் பேசிய எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங், சிங்கப்பூரின் திறனாளர் வளத்தை வலுப்படுத்தி உள்ளூர் வல்லுநர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை அந்நிலையம் உருவாக்கும் என்றார்.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் $144.1 பில்லியனை எட்டி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.3 விழுக்காடாகப் பதிவானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நான்கு மையங்களை ஒரே கூரையின்கீழ் இணைக்கும் அந்நிலையம், வங்கிகள், வணிகர்கள், அரசாங்கங்கள், தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட சந்தைகளுக்கான வர்த்தகத் தீர்வுகளையும் மோசடித் தடுப்புத் தொழில்நுட்பங்களையும் விரைவாக உருவாக்கும் என மாஸ்டர்கார்ட் தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூரின் எதிர்காலத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை அப்புதிய முதலீடு காட்டுவதாகவும் சிங்கப்பூர்க் காவல்துறை, இணையப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடனான உறவை அது வலுப்படுத்தும் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஆட்சேர்ப்புஅமெரிக்காநிறுவனம்