சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் கண்ணோட்டத்திலிருந்து நீரிழிவு நோய் அல்லது செரிமானப் பிரச்சினைகளைக் கையாளச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வெகுவிரைவில் பயன்படுத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தொடங்கியுள்ள புதிய ஆய்வுக்கூடமொன்றின் திட்டங்களில் ஒன்றாக அது அமையவிருக்கிறது.
என்டியு, பெய்ஜ்ஜிங் சீன மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வுக்கூடத்தை ஆரம்பித்துள்ளது. பெய்ஜ்ஜிங் சீன மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள டொங்ஃபாங் (Dongfang) மருத்துவமனையில் ஆய்வுக்கூடம் நிறுவப்படும்.
என்டியுவின் சீன மருத்துவத் துறையில் பயிலும் மாணவர்கள் ஆய்வுப் பணிகளுக்காக அங்கு அனுப்பப்படுவர்.
பான் பசிஃபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற முதலாம் சிங்கப்பூர் அனைத்துலகச் சீனப் பாரம்பரிய உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் புதிய ஆய்வுக்கூடம் பற்றிச் சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன் அறிவித்தார்.
பழங்கால அறிவுக்கும் நவீனத் தொழில்நுட்பத்திற்கும் பாலமாக ஆய்வுக்கூடம் திகழும் என்றார் அவர்.
சீன மருத்துவத்தில் புதிய முதுநிலைப் பட்டமொன்று என்டியுவில் அடுத்த ஆண்டு (2026) தொடங்கப்படும் என்றும் டாக்டர் கோ அறிவித்தார். உள்ளூர்ப் பல்கலையொன்றில் அத்தகைய முதுநிலைப் பட்டப் படிப்பு வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
சீன மருத்துவத் துறைப் பட்டதாரிகளும் அந்தத் துறையில் இருப்போரும் முதுநிலைப் பட்டக் கல்வியில் சேர்ந்து பயிலலாம். மேலும் மருத்துவ, பல்மருத்துவ, சுகாதாரத் துறையினரும்கூட அதனைப் படிக்கமுடியும்.
தொடர்புடைய செய்திகள்
பழங்கால, நவீனச் சீன மருத்துவக் கோட்பாடுகளையும் சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்தல், ஆய்வு முறைகள் முதலிய பாடங்களில் முதுநிலைப் பட்டக் கல்வி மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம்.
பின்னர் அவர்கள் மகப்பேற்று மருத்துவம், குத்தூசி மருத்துவம் அல்லது உயிர்மருத்துவ அறிவியல் முதலியவற்றில் விரும்பியதைத் தெரிவுசெய்து நிபுணத்துவம் பெறலாம்.
மனிதவள மூத்த துணையமைச்சருமான டாக்டர் கோ, “ இன்று நாம் நிறுவும் அடித்தளம் பாரம்பரியச் சீன மருத்துவத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நல்ல திறமையான பாரம்பரியச் சீன மருத்துவ ஆலோசகர்கள் உருவாக அது வழியமைக்கும்,” என்றார்.
சிங்கப்பூரர்களில் ஐவரில் ஒருவர் பாரம்பரியச் சீன மருத்துவ ஆலோசகர்களை நாடுவதாகவும் டாக்டர் கோ சுட்டினார்.


