ஏப்ரல் 1 முதல் பிறக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு 10 வார பகிர்வு விடுப்பு

ஏப்ரல் 1 முதல் பிறக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு 10 வார பகிர்வு விடுப்பு

2 mins read
f384f7e4-fab6-4a2c-a2e5-690017731c37
ஏப்ரல் முதல் தேதியிலும் அதற்குப் பிறகும் பிறக்கும் சிங்கப்பூர் குழந்தைகளின் பெற்றோர் 10 வார பகிர்வு விடுப்பைப் பெறுவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலும் அதற்குப் பிறகும் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க, தகுதியுள்ள பெற்றோர் இனி கூடுதல் விடுப்பைப் பெறலாம்.

தற்போதுள்ள மகப்பேறு விடுப்புடன் கூடுதலாக 10 வாரங்கள் பகிர்வு விடுப்பைப் பெற்றோர் பெறுவர் என்று சமுதாயக் குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 26) அறிவித்துள்ளது.

கடந்த 2024 தேசிய தினப் பேரணியில் இந்தத் திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. 2025ல் ஆறு வார கால பகிர்வு விடுப்பு அளிக்கப்பட்டது. தற்போது அது 10 வாரங்களாகக் கூட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசாங்கத்தால் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு, தந்தையர் விடுப்பு ஆகியவற்றுடன் சேர்த்து, ஒரு குழந்தையின் முதல் ஆண்டில் தகுதியுள்ள பெற்றோர் மொத்தம் 30 வாரங்கள்வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற முடியும்.

இந்த 10 வார விடுப்புக்கு ஏப்ரல் முதல் தேதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த சிங்கப்பூர் குடியுரிமையுள்ள குழந்தையின் பெற்றோர் தகுதிபெறுவர்.

தந்தை, தாய் ஆகிய இருவருக்கும் சமமாகத் தானாகவே விடுப்பு பகிர்ந்தளிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது. எனினும், தம்பதியினர் தங்கள் பராமரிப்புத் தேவைகளுக்கு ஏற்ப இந்த விடுப்பு நாள்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளவும் அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

இந்த விடுப்பைக் குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்பதுடன், வழக்கமான மகப்பேறு அல்லது தந்தையர் விடுப்பை முழுமையாகப் பயன்படுத்திய பின்னரே இதைப் பயன்படுத்த முடியும். விடுப்புத் திட்டங்கள் குறித்துப் பணியாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது கட்டாயம்.

பெற்றோரிடையே விடுப்பு எடுப்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில், அவர்கள் குழந்தை பிறந்த முதல் 26 வாரங்களுக்குள் இந்த விடுப்பைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கு அவர்கள் குறைந்தது நான்கு வாரங்களுக்கு முன்னதாகத் தகவல் அளிக்க வேண்டும் என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கவும், இளம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

பெற்றோரும் முதலாளிகளும் இது குறித்த கூடுதல் விவரங்களை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வழிகாட்டிக் கையேடுகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்