‘அடிமைப் பெண்ணைத்’ துன்புறுத்திய குடும்பத்தின் தலைவிக்குச் சிறைத்தண்டனை

‘அடிமைப் பெண்ணைத்’ துன்புறுத்திய குடும்பத்தின் தலைவிக்குச் சிறைத்தண்டனை

2 mins read
மனநலம் குறைந்த ‘அடிமைப் பெண்’ ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் துன்புறுத்தலுக்கு ஆளானார்
3e7bbb82-9a32-4156-a526-72c9c2da637c
படம்: - பிக்சாபே

மனநலக் குறைபாடுள்ள பெண்ணைத் துன்புறுத்திய குடும்பத்தின் தலைவியான ஹஸ்மா சுலோங் எனும் மூதாட்டிக்கு 17 ஆண்டுகள் 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் ஹஸ்மாவிற்கு ஜூலை 2ஆம் தேதி இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இறுதி நபர் அவர்.

பாதிக்கப்பட்ட பெண், ஹஸ்மாவின் மகனின் உயர்நிலைப் பள்ளித் தோழி என்றும் 2016ஆம் ஆண்டு மத்தியில் தனது வீட்டிலிருந்து வெளியேறி, ஹஸ்மா குடும்பத்தினரிடம் அவர் அடைக்கலம் நாடியதாகவும் கூறப்பட்டது.

27 வயதான அவரை ஹஸ்மா குடும்பத்தினர் தங்கள் ‘அடிமை’யாகக் கருதி வேலைவாங்கினர்.

மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த அப்பெண்ணின் தந்தை வீடு திரும்பும்படி அவரிடம் கெஞ்சியபோதும் ஹஸ்மா குடும்பத்தினர் அவரை வேலைக்குச் செல்லக்கூட அனுமதிக்கவில்லை.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக ஹஸ்மாவும் அவரது மகள்கள் ஹஸ்னிஸாவும் ஹஸ்லிண்டா இஸ்மாயிலும் அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தினர்.

தன் கணவரிடம் அப்பெண் முறைதவறி நடந்துகொண்டதாகக் கூறிய ஹஸ்லிண்டா அவரது கால் விரலை முறித்ததுடன் பற்களை உடைத்ததாகவும் வெந்நீரை மேலே ஊற்றியதாகவும் தெரிகிறது.

அப்பெண் தப்பியோடாமல் தடுக்க இரவு வேளைகளில் மூதாட்டி ஹஸ்மா அவரை உலோகச் சங்கிலியில் கட்டிப்போட்டார். பந்தடிக்கும் மட்டையால் மூன்று முறை தலையில் தாக்கியதில் அப்பெண்ணுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதுடன் காது உருவிழந்து போனது.

சுத்தியலால் அப்பெண்ணின் பற்களை உடைக்கும்படி தனது மகள் ஹஸ்லிண்டாவை மூதாட்டி தூண்டினார். இருவரும் சேர்ந்து அப்பெண்ணின் கால் விரல்களை ‘பிளையர்’ எனும் உலோகக் கருவிகளைப் பயன்படுத்தித் திருகினர்.

சீழ் பிடித்த கால் விரலின்மேல் தண்ணீர் நிரம்பிய போத்தலை மூதாட்டி போட்டதாகக் கூறப்பட்டது. மேலும், வாயில் ரத்தம் வருமளவு கன்னத்தில் அறைந்தது, பெண்ணின் வலது கண்ணில் விரலைச் செலுத்தி நிரந்தரப் பார்வை இழப்பை ஏற்படுத்தியது, கீழ்வயிற்றுப் பகுதியில் கொதிக்கும் நீரை ஊற்றியது ஆகிய செயல்களிலும் மூதாட்டி ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

அன்றாடம் எட்டு முதல் 12 மணி நேரம் உலோகச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட அப்பெண் வீட்டைப் பெருக்கி, துடைத்தால்தான் காலையில் பசியாற முடியும். மலேசியாவில் ஒரு வீட்டைச் சுத்தப்படுத்த அவரை இக்குடும்பத்தினர் அழைத்துச் சென்றபோது கொதிக்கும் எண்ணெய்யை அவர் மீது வீசினர். அவரது உடல்நிலை மோசமானதால் கழிவறையிலேயே கட்டிப்போட்டனர்.

2018 ஜனவரியில் பெண்ணின் வாய், மூக்கிலிருந்து கறுப்புத் திரவம் வெளியானது. காயங்களில் சீழ் வடிந்ததால் உடலில் துர்நாற்றம் வீசியது. அவரது மனநிலையும் மோசமாகவே கிட்டத்தட்ட சாகும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காவல்துறையிடம் அப்பெண் திடீரென்று இரண்டு வாரங்களுக்குமுன் தங்களிடம் வந்ததாக மூதாட்டி ஹஸ்மா பொய்யுரைத்தார்.

இக்குடும்பத்தினரின் துன்புறுத்தலுக்கு ஒரு குழந்தை காட்டுமளவுகூட அப்பெண்ணால் எதிர்ப்பு தெரிவிக்க இயலவில்லை என்பதை அரசாங்க வழக்கறிஞர் சுட்டினார். அப்பெண்ணின் மனநலக் குறைபாடு அதற்குக் காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்