கால்நடைகளுக்கு நன்றி செலுத்த நடந்தேறிய மாட்டுப் பொங்கல்

2 mins read
0f338180-920d-4b13-9269-f00da17cefe6
கால்நடைகளுக்குப் பூப்போட்டு வழிபடும் லி‌‌‌ஷா அமைப்பின் தலைவர் ரெகுநாத் சிவா. - படம்: லி‌‌‌ஷா

சங்குகள் முழங்க, தீபாராதனை, மணியோசையுடன் லிட்டில் இந்தியாவில் மாட்டுப் பொங்கல் கோலாகலமாக நடந்தேறியது.

பொங்கல் விழாவின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அன்று, விழாவின் முக்கிய அங்கமாகத் திகழும் மாடுகளுக்குப் பொதுமக்கள் சூழ பொங்கல் வைத்துப் படைத்து, நன்றி தெரிவிக்கப்பட்டது. தேக்கா வட்டாரத்தின் கிளைவ் ஸ்திரீட்டில் உள்ள ‘பொலி’ வளாகத்தில் அமைந்த கூடாரத்தில் இவ்விழா நடைபெற்றது.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), விக்னே‌ஷ் பால் பண்ணையுடன் இணைந்து ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டும் கோலாகலமாகக் கொண்டாட்டங்கள் நடந்தேறின.

பிற்பகல் 3 மணியளவில், முதலில் பொங்கல் வைத்து வழிபாடுகள் தொடங்கின. மாடுகள் பட்டுப் பரிவட்டங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், சந்தன, குங்குமப் பொட்டுகளுடன் காணப்பட்டன.

பண்ணையின் உரிமையாளர் சுப்பிரமணியம் (இடமிருந்து நான்காவது), அவரது குடும்பத்தினர், லி‌‌‌ஷா அமைப்பைச் சேர்ந்தோருடன், விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள்.
பண்ணையின் உரிமையாளர் சுப்பிரமணியம் (இடமிருந்து நான்காவது), அவரது குடும்பத்தினர், லி‌‌‌ஷா அமைப்பைச் சேர்ந்தோருடன், விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

மூன்று பானைகளில் பொங்கல் தயாரானவுடன், மாலை 4 மணியளவில் சங்கு ஊதி, மாடுகளுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து, பண்ணையின் உரிமையாளர் சுப்பிரமணியம், அவரது குடும்பத்தினர், லி‌‌‌ஷா அமைப்பின் தலைவர் ரெகுநாத் சிவா, பிற லி‌‌‌ஷா உறுப்பினர்களும் மாடுகளுக்குப் பூப்போட்டு வழிபட்டனர்.

இவ்விழாவில் பங்கேற்ற திரு ரெகுநாத் சிவா, “ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்தி, கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதில் மகிழ்ச்சி. இது சிறப்பான திருநாள்,” என்றார்.

சங்கு முழங்க, மணியோசையுடன் மாடுகளுக்கு வழிபாடுகள் நடைபெற்றன.
சங்கு முழங்க, மணியோசையுடன் மாடுகளுக்கு வழிபாடுகள் நடைபெற்றன. - படம்: லாவண்யா வீரராகவன்

தொடர்ந்து, இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, பொதுமக்கள் சூழ, அனைவரும் பங்கெடுக்கும் வகையில் நடைபெறுவதாகச் சொன்ன அவர், “மாட்டுப் பொங்கலை இங்கு வந்து அனைவரும் வழிபட்டுக் கொண்டாடுகின்றனர். இது மனநிறைவைத் தருகிறது,” என்றார்.

“எனக்குக் கால்நடைகளின் மேல் பிரியம் அதிகம். அன்றாடம் இருவேளையும் பால்தந்து, நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் நன்றி செலுத்துவது அவசியம் என நினைக்கிறோம்.

“அவற்றை அலங்கரித்து, வழிபட்டு, பொங்கல் ஊட்டிக் கொண்டாடுகிறோம்,” என்றார் விக்னே‌ஷ் பால்பண்ணையின் உரிமையாளர் சுப்பிரமணியம்.

“பலரும் இணைந்து கொண்டாடும் இவ்விழாவில் பங்கேற்பது, அனைவருடனும் பேசிப் பழகச் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

“குறிப்பாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது கலாசாரத்துக்கு அருகில் செல்லும் உணர்வை அளிக்கிறது,” என்றார் விழாவில் பங்கேற்ற போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றும் விக்னே‌ஷ்வரி, 33.

பட்டுப் பரிவட்டம், மலர் அலங்காரங்களுடன் காணப்பட்ட கால்நடைகள்.
பட்டுப் பரிவட்டம், மலர் அலங்காரங்களுடன் காணப்பட்ட கால்நடைகள். - படம்: லாவண்யா வீரராகவன்

“எனது நண்பர் மூலமாகத் தெரிந்துகொண்டு ஈராண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்று வருகிறேன். இது எனது மனதுக்கு நெருக்கமான பண்டிகை. இது போன்ற கலாசாரத்தைச் சிங்கப்பூரில் இப்போதும் பாதுகாத்துப் பின்பற்றுகிறோம் என்பது சிறப்பானது. ஒரு தமிழ்ப்பெண்ணாக இது எனக்குப் பெருமையான தருணம்,” என்றார் எஸ்டி இஞ்சினியரிங் நிறுவனத்தில் பணியாற்றும் அனிபிரியா, 27. விழாவின் இறுதியில் பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்