தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மே 13: ஆண்டின் இறுதிக் குறுநிலவு சிங்கப்பூர் வானை அலங்கரிக்கும்

1 mins read
a3fee0aa-88b7-4c4d-a7f3-fc1bc39f561e
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி காணப்பட்ட குறுநிலவு (இடம்), அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தோன்றிய பெருநிலவு. - படம்: விக்கிப்பீடியா
multi-img1 of 2

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதிக் குறுநிலவைச் (micromoon) செவ்வாய்க்கிழமை (மே 13) இரவு வானிலை சாதகமாக இருந்தால் விண்ணில் காணலாம்.

செவ்வாய்க்கிழமை இரவு 7.34 மணிக்கு எழும் இந்த முழுநிலவைப் பின்னிரவு 12.56 மணிக்கு நன்றாகக் காண முடியும் என்று வானியல் இணையத்தளமான ‘டைம்அண்ட்டேட்.காம்’ கூறுகிறது.

நிலா பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

அந்தச் சுற்றுப்பாதையில் அது பூமியிலிருந்து வெகுதொலைவில் இருக்கும்போது தோன்றும் முழுநிலவு (பௌர்ணமி) வழக்கமான பௌர்ணமியைவிட அளவில் சிறியதாகக் காணப்படுவதால் குறுநிலவு என்றழைக்கப்படுகிறது.

அதுவே, சுற்றுப் பாதையில் பூமிக்கு அருகில் இருக்கையில் அளவில் மிகப் பெரிதாகத் தோன்றுவதால் பெருநிலவு (supermoon) என்றழைக்கப்படும்.

ஒப்புநோக்க, குறுநிலவானது பெருநிலவைவிட 12.5 முதல் 14.1 விழுக்காடு வரை சிறியதாகத் தோன்றும். வழக்கமான முழுநிலவைவிட அது 5.9 முதல் 6.9 விழுக்காடு வரை சிறியதாக இருக்கும் என்று ‘டைம்அண்ட்டேட்.காம்’ குறிப்பிட்டுள்ளது.

ஆங்கில நாட்காட்டியில் மே மாத முழுநிலவு ‘ஃப்ளவர்மூன்’ என்று அழைக்கப்படுகிறது. வடஅமெரிக்காவில் பூக்கள் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அவ்வாறு அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தோன்றும் குறுநிலவை சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலிருந்தும் காணலாம் என்றாலும் மரினா அணைக்கட்டு, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற திறந்தவெளிப் பகுதிகளிலிலிருந்து முழுமையாக ரசிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்