மே மாதம் சரிந்தது புதிய தனியார் வீடுகளின் விற்பனை

2 mins read
ef139b32-3ad5-42ce-88f0-ab9dfb6fc64b
கடந்த மாதம் புதிய தனியார் வீடுகள் எதுவும் விற்பனைக்கு வரவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் கடந்த மாதம் புதிய திட்டங்கள் எதுவும் அறிமுகம் காணவில்லை என்றபோதும் 312 தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட 663 வீடுகளுடன் ஒப்புநோக்க அது கிட்டத்தட்ட பாதிக்கும் குறைவு.

எனினும் கடந்த ஆண்டு இதே மாதம் விற்பனையான தனியார் வீடுகளைவிட அது 39.9 விழுக்காடு அதிகம். கடந்த ஆண்டு மே மாதம் 223 வீடுகள் விற்கப்பட்டன என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் ஜூன் 16ஆம் தேதி தகவல் வெளியிட்டது.

இவ்வாண்டு இதுவரை விற்கப்பட்ட புதிய வீடுகளில் மே மாதத்தில்தான் குறைவான வீடுகள் விற்கப்பட்டன. புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது, மந்தமான விற்பனைகள், பொதுத் தேர்தல் ஆகிய காரணங்களை ஆரஞ்ச் டீ அன்ட் டை நிறுவனம் குறிப்பிட்டது.

இவ்வாண்டு மே மாதத்தில்தான் முதன்முறையாகப் புதிய திட்டங்கள் எதுவும் சந்தையில் அறிமுகம் காணவில்லை என்று ப்ரோப்னெக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு, உள்ளடக்கத் தலைவர் வோங் சியூ யிங் கூறினார்.

பொருளாதாரத்திலும் வேலைச் சந்தையிலும் தொடரும் நிச்சயமற்ற நிலை தனியார் வீட்டு விற்பனைகளைப் பாதித்திருப்பதாகவும் நிபுணர்கள் சுட்டினர்.

குடியிருப்புத் திட்டங்களை அறிமுகம் செய்ய நிறுவனங்கள் இன்னும் அனுகூலமான சொத்துச் சந்தை நிலவரத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் வீடு வாங்குவோரும் குறைந்த விலையில் அறிமுகமாகும் சிறந்த வீடுகளை எதிர்பார்ப்பதாகவும் மொகுல்.எஸ்ஜி நிறுவன தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மாக் சொன்னார்.

ஏப்ரல் மாதத்தைப் போலவே மே மாதத்திலும் $10 மில்லியனுக்கும் அதிகமான மூன்று பரிவர்த்தனைகள் இடம்பெற்றன.

டிஸ்ரிக்ட் 10இல் உள்ள 21 அண்டர்சன் கூட்டுரிமை வீடுகளில் உள்ள 4,489 சதுர அடி வீடு ஆக அதிக விலையைப் பெற்றது. ஒரு சதுர அடிக்கு $5,347 என வீடு $24 மில்லியனுக்கு விலைபோனது.

மற்ற இரண்டு வீடுகள் டிஸ்ரிக்ட் 11இல் உள்ள 32 கில்ஸ்டெட்டில் விற்பனையாகின. 4,209 சதுர அடியிலும் 4,219 சதுர அடியிலும் உள்ள அந்த இரண்டு வீடுகளும் $15.1 மில்லியனுக்குக் கைமாறின.

மூன்று வீடுகளும் நிரந்தரவாசிகளால் வாங்கப்பட்டன என்று ஹட்டன்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்