வரும் மே முதல் ஜூலை மாதத்துக்கு இடைப்பட்ட காலத்துக்குக் கூடுதலாக 1,099 வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) விநியோகிக்கப்படும்.
கடந்த பிப்ரவரி முதல் இம்மாதம் வரையிலான காலகட்டத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 6.4 விழுக்காடு அதிகமாகும். அதன்படி, மே-ஜூலை காலத்தில் ஒட்டுமொத்தமாக 18,232 சிஓஇ சான்றிதழ்கள் ஏலத்துக்கு விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்தது.
பிப்ரவரி-ஏப்ரல் காலத்தில் 17,133 சிஓஇ சான்றிதழ்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.
மே-ஜூலை காலகட்டத்துக்கான சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, சென்ற ஆண்டு ஏப்ரலிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை வாகனப் பதிவுகள் அகற்றப்பட்டது அதற்கு ஒரு காரணம். அதோடு, ஆண்டுதோறும் ‘சி’ பிரிவைச் சேர்ந்த வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை (2024 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி) 0.25 விழுக்காடு அதிகரித்துவருவதற்கு ஏதுவாக சிஓஇ சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.
டாக்சிகளின் எண்ணிக்கையில் மாற்றத்தைச் சமாளிப்பதும் ஒரு காரணம்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அடுத்த சில ஆண்டுகளில் அதிபட்சம் கூடுதலாக 20,000 சிஓஇ சான்றிதழ்களை ஏலத்துக்கு விடும் நடவடிக்கைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் எடுத்துவருகிறது. மே-ஜூலைக்கு சிஓஇ சான்றிதழ்கள் அதிகரிக்கப்படுவது அதில் ஓர் அங்கமாகும்.

