விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவும் வகையில், இளநிலை ஊழியர்கள் அனைவருக்கும் ஒருமுறை மட்டும் $1,250 வழங்கப்படும் என்று மேபேங்க் தெரிவித்துள்ளது.
மேபேங்க் சிங்கப்பூர், எட்டிக்கா இன்ஷூரன்ஸ் சிங்கப்பூர், மேபேங்க் அசெட் மேனேஜ்மென்ட் சிங்கப்பூர், மேபேங்க் செக்யூரிட்டீஸ் சிங்கப்பூர் ஆகிய மேபேங்க் நிறுவனங்களில் பணியாற்றும் இளநிலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வழங்குதொகை கிடைக்கும்.
இதன்மூலம் எத்தனை பேர் பயன்பெறுவர் என்ற விவரத்தை அவ்வங்கி குறிப்பிடவில்லை.
இதன் தொடர்பில் மேபேங்க் சிங்கப்பூர் தலைமை நிர்வாகி ஆல்வின் லீ வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கையில், இளநிலை ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் வகையிலும் இந்த வழங்குதொகை தரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மார்ச் மாதத்திலும் அவ்வங்கி இவ்வாறு உதவித்தொகை வழங்கியது. அப்போது, 141 இளநிலை ஊழியர்களுக்கு $1,250 வரை வழங்கப்பட்டது.
டிபிஎஸ், யுஒபி, ஓசிபிசி ஆகிய வங்கிகளும் தங்களது இளநிலை ஊழியர்களுக்கு இத்தகைய உதவியை ஏற்கெனவே அறிவித்திருந்தன.
இவ்வாண்டு ஏப்ரலில் தனது 6,000 இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒரு மாத போனஸ் வழங்கப்படும் என்று யுஓபி வங்கி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அறிவித்தது.
அதேநாளில், ஓசிபிசி வங்கியும் தனது 4,000 இளநிலை ஊழியர்கள் ஒருமுறை மட்டும் $1,000 வழங்குதொகையைப் பெறுவர் என அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் டிபிஎஸ் வங்கி 5,500க்கும் மேற்பட்ட இளநிலை ஊழியர்களுக்கு போனசாக $1,000 வழங்கியது.