சிங்கப்பூரில் இயங்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றான மேபாங்க், மோசடிகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களை அடையாளம் கண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இலக்குடன் கலைக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நன்யாங் நுண்கலைக்கழகத்தின் வாழ்நாள் கல்விகற்றல் மையத்துடன் இணைந்து மேபாங்க் வங்கி, கண்காட்சியை கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கிவைத்தது.
அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) வரை நடைபெறும்.
‘மிக விலையுயர்ந்த சொற்கள்’ என்ற பொருள்படும் தலைப்பில் நடக்கும் கண்காட்சியின் பல வடிவங்கள், சீன ஆங்கில அலங்கார எழுத்துரு பாணியில் (காலிகிராஃபி) வடிவமைக்கப்பட்டுள்ளன.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒருவித கலை வடிவு போலவும் அருகில் கவனித்தால் ‘வங்கிக்கு உங்கள் உதவி தேவை’ போன்ற தெளிவான பொருள்படும் வகையிலும் கண்காட்சியின் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளே மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரிடம் அதிகம் பயன்படுத்தியதாகும்.
அந்தச் சொற்களுக்கு அருகில் $242 மில்லியன் என்ற எண்ணிக்கையும் காட்டப்படுகிறது. ஏனெனில் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் 2025ஆம் ஆண்டில் இழக்கப்பட்ட தொகையின் மதிப்பு அதுவாகும்.
கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்களை பொதுமக்கள் அறிந்துகொண்டு, மோசடிக்காரர்களால் ஏமாற்றப்படுவதற்கு முன்பாகவே தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு சார்ந்த மோசடிகளில் ஏமாற்றுக்காரர்கள் இயல்பாக பயன்படுத்தும் தொடர், “அதிக லாபம், எவ்வித அபாயமும் இல்லை” என்ற பொருள்படும் ஆங்கிலச் சொற்கள். முதலீடு மோசடிகளில் மட்டும் கடந்த ஆண்டில் $336 மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதைப்போன்ற பல மோசடிகளில் பயன்பட்ட சொற்றொடர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகக் கண்காட்சியில் கலை நயத்தோடு வழங்கப்பட்டுள்ளன.
