சிங்கப்பூரைப் பொறுத்தவரை ‘எம்பாக்ஸ்’ (குரங்கம்மை) தொற்று நோய் தொந்தரவாக இருக்கும். ஆனால் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் அதனை நிர்வகிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் திங்கட்கிழமை (செப் 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குரங்கம்மை தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
நெருக்கமான தொடர்பு மூலம் அந்நோய் பெரிய அளவில் பரவும். அது, காற்றில் பரவும் கிருமியல்ல. கொவிட்-19 போல வெகுதூரம் பரவாது.
‘எம்பாக்ஸ்’ தொற்று 12 மடங்கு மெதுவாகப் பரவக்கூடியது. பத்து பேருக்கு ‘எம்பாக்ஸ்’ தொற்று இருந்தால் அவர்கள் மூலம் 13 பேருக்கு மேல் பரவலாம். ஆனால் பத்து பேருக்கு கொவிட்-19 தொற்று இருந்தால் அவர்கள் மூலம் 50 பேருக்கு மேல் அந்நோய் பரவும் என்றார் அமைச்சர் ஓங்.
சிங்கப்பூருக்குள் நுழையும் எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகாய, கடல் வழி சோதனைச் சாவடிகளில் எம்பாக்ஸ் அறிகுறிகள் இருந்தால் பயணிகள் தெரிவிக்க வேண்டும். உடல் வெப்பநிலை உள்ளிட்ட சோதனைகளை அவர்கள் கடந்து செல்ல வேண்டும்.
“இங்குள்ள மருத்துவர்களிடம் ‘எம்பாக்ஸ்’ குறித்து விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யாருக்காவது சந்தேகப்படும்படியான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ‘எம்பாக்ஸ்’ இருப்பது உறுதியானால் குணமடையும் வரை அவர் தனிமைப்படுத்தப்படுவார். அந்த நபருடன் நெருக்கமாக இருந்தவர்களும் 21 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவு உட்பட மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு ஓங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களுக்கு தடுப்பூசி தேவையில்லாதது. நோய்த் தொற்றக்கூடிய ஆபத்து உள்ள நெருக்கமாக உள்ளவர்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடலாம். சிங்கப்பூரில் பெரியம்மைக்கான ‘ஜின்னியோஸ்’ (Jynneos) தடுப்பூசிகள் போதுமான அளவில் உள்ளது. இது, ‘எம்பாக்ஸ்’ தொற்றிலிருந்தும் பாதுகாக்கும்.
நோய்க்கு எதிரான நாட்டின் ஆயத்தநிலையை வலுப்படுத்த சுகாதார அமைச்சு அதிக தடுப்பூசிகளை வாங்கும் திட்டமுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 1981 முற்பகுதி வரை பெரியம்மை தடுப்பூசிகளுக்கான தேவையிருந்ததால் சிங்கப்பூரர்களில் பெரும்பாலான 45 வயது மேற்பட்டவர்களுக்கு ஓரளவு நோய்த் தடுப்பு சக்திகள் இருக்கும்.
2024ஆம் ஆண்டில் இந்நாள் வரை சிங்கப்பூரில் 15 ‘எம்பாக்ஸ்’ தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவையெல்லாம் மிதமாக பரவக்கூடிய 2வது நிலையைச் சேர்ந்தவை. தற்போதைய முதல் நிலையை ஒரு கட்டத்தில் எட்டலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் தெரிவித்தார்.