சிங்கப்பூரில் நிபா கிருமிக்கு எதிரான நடவடிக்கைகள் தளர்த்தப்படும்

சிங்கப்பூரில் நிபா கிருமிக்கு எதிரான நடவடிக்கைகள் தளர்த்தப்படும்

1 mins read
ac9e7e41-5729-4b55-afba-72fd3f4f3c89
விமான நிலையத்திலும் கடல் துறைமுகங்களிலும் உடல் வெப்பநிலைச் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று தொற்றுநோய் தடுப்பு நிலையம் கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில், பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து நிபா கிருமித்தொற்றுக்கு எதிரான சில நடவடிக்கைகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும்.

இந்தியாவில் ஏற்பட்ட நிபா கிருமிப்பரவலுடன் தொடர்புடைய சம்பவங்கள் இதுவரை இங்குப் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் விமானங்களுக்கும் கப்பல்களுக்கும், விமான நிலையங்களிலும் கடல்துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலைச் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று தொற்றுநோய் தடுப்பு நிலையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

சிங்கப்பூரில் உள்ள நுழைவிடங்களில் சுற்றுப்பயணிகளுக்குச் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட கிருமிப்பரவலைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளில் அவை அடங்கும்.

இந்திய அதிகாரிகள், இருவருக்கு நிபா கிருமித்தொற்று இருந்ததை உறுதிசெய்த பிறகு, சில ஆசிய நாடுகள் கிருமிப்பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கியிருந்தன.

அதனைத் தொடர்ந்து, பங்ளாதேஷில் கடந்த மாதம் கிருமித்தொற்று காரணமாக மாது ஒருவர் உயிரிழந்ததாக உலகச் சுகாதார அமைப்பு கூறியது.

நிபா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடும் காய்ச்சல், வாந்தி, மூச்சுப் பிரச்சினை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இருப்பினும், மோசமான சம்பவங்களில் கிருமித்தொற்று, உணர்விழந்த மயக்க நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்.

இதற்கிடையே, சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும் என்று நிலையம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிபாசிங்கப்பூர்வெப்பநிலை