பொதுத் தேர்தல் 2025ல் வாக்களிப்பு நாள் நெருங்கிவரும் நிலையில், இணையத்தில் போலியான செய்திகள் பரப்பபடுவதைத் தடுக்கும் ‘ELIONA’ சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வகை தகவல்களுக்கு வாக்களிப்பு நாள்வரை தடையிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிக் காணொளிகள், போலியான படங்கள், வேட்பாளர் சொல்லாததைச் சொன்னதுபோலச் சித்திரிக்கும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு, வன்போலித் தொழில்நுட்பம் (Deepfake technology) மூலம் தயாரிக்கப்பட்ட போலியான படங்கள், சில வகை இணைய விளம்பரங்கள் ஆகியவை அதில் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு மட்டுமன்றி ‘ஃபோட்டோஷாப்’, ஒலிச்சேர்க்கை (Dubbing) போன்ற முறைகளில் தயாரிக்கப்பட்ட போலிக் காணொளிகளுக்கும் அது பொருந்தும்.
மின்னிலக்க முறையில் மாற்றம் செய்யப்பட்ட போலித் தகவல்கள் பரப்பப்படுவது உண்மைக்கும் நியாயமான தேர்தல் முறைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கூறியது.
மேலும், இவ்வகைத் தகவல்கள் ஜனநாயகத்தின் மீதான மதிப்பைக் குறைக்கவும், நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் நோக்கிலும் உருவாக்கப்படுவதாக அமைச்சு கூறியது.
இவ்வாறு பரவும் பொய்த் தகவல்களை அகற்றுதல், முடக்குதல், மேலும் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது. சமூக ஊடகச் சேவைகள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உரிய காரணமின்றி பின்பற்றத் தவறினால் ஒரு மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைப் பின்பற்றாத பிறருக்கு குறைந்தது ஆயிரம் வெள்ளி அபராதம், 12 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இவ்வகைத் தகவல்களைப் பதிவிடுபவர்கள் மட்டுமன்றி, வேண்டுமென்றே பரப்புபவர்கள் மீதும் குற்றம் சாட்டப்படலாம்.
மேலும், தேர்தல் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய இணைய நடத்தைக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களைப் பொதுமக்கள் பதிவிடவோ பகிரவோ கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொருவருக்குத் துன்புறுத்தல், எச்சரிக்கை, மன உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய கருத்துகளையோ, இன நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய கருத்துகளையோ வெளியிட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இணையம், தகவல் பரிமாற்றத்துக்கான முக்கியத் தளமாக மாறியுள்ள நிலையில் பொதுத் தேர்தலின் நேர்மையைப் பாதுகாக்கப் பொதுமக்கள் பொறுப்பான இணைய நடத்தையில் ஈடுபடுமாறு சிங்கப்பூர்க் காவல்துறையும், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் கேட்டுக்கொண்டன.

