தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகனங்களை மோதி நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுப்பதற்கான கட்டாய நடவடிக்கைகள்

2 mins read
நாடாளுமன்றக் கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதில்
75e332f2-85f0-46c1-8d7c-3d7d9deccf7d
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் மதிப்பீட்டு நடவடிக்கையை உள்துறை அமைச்சு வழக்கமான இடைவெளியில் மேற்கொண்டுவருவதாக அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேரெண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், வாகனங்களை மோதி நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க தடுப்புகளைப் பயன்படுத்துவது இனி கட்டாயமாக்கப்படக்கூடும்.

சில கட்டடங்களில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தும் கட்டைத்தூண்களை நிறுவ வேண்டியிருக்கும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளையும் அடையாளம் காணும் மதிப்பீட்டு நடவடிக்கையை உள்துறை அமைச்சு வழக்கமான இடைவெளியில் மேற்கொண்டுவருவதாக அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் புதன்கிழமை (பிப்ரவரி 26) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

பொது நிகழ்ச்சிகள், இரவுநேரக் கேளிக்கை வட்டாரங்கள் போன்ற கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் வாகனங்களை மோதி மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்களைத் தடுக்க உள்துறை அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று திரு கியாம் கேட்டிருந்தார்.

மதிப்பீடுகளின் அடிப்படையில் நடைமுறைக்கு உகந்த நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்வதாகத் திரு சண்முகம் தெரிவித்தார்.

மிக அதிகமானோரை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் அல்லது பாதுகாப்பு மிரட்டல் அதிகமிருப்பதாக மதிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் காவல்துறை கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம் என்றார் அவர்.

நிகழ்ச்சி எந்த வகையானது, அது நடைபெறும் இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப, வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் கான்கிரீட் தடுப்புகளையோ மோதலைத் தாங்கக்கூடிய தடுப்புகளையோ அமைக்க வேண்டியிருக்கும்.

புகழ்பெற்ற கட்டடங்கள் அல்லது அதிகமானோர் வந்துசெல்லக்கூடிய கட்டடங்களில் வாகனத் தடுப்புக் கட்டைத்தூண்கள், கண்காணிப்பு கேமரா போன்றவை இடம்பெற வேண்டியது கட்டாயம்.

கட்டடங்கள் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது இத்தகைய அம்சங்களைக் கட்டாயம் அமைக்கவேண்டும்.

அமைச்சரின் பதிலில் மேற்கூறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கூட்ட நெரிசலான இடங்களில் காவல்துறை சுற்றுக்காவலிலும் ஈடுபடும் என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்