தேசிய ஒலிபரப்பு நிறுவனமான மீடியாகார்ப், அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதி பெறாமல், பாதுகாக்கப்பட்ட பங்களா வீடு ஒன்றை அண்மையில் மறுஅலங்காரம் செய்துள்ளதாக அறியப்படுகிறது.
மவுண்ட் ஃபேபர் அருகே மீடியாகார்ப் வாடகைக்கு எடுத்துள்ள அந்த பங்களா வீட்டில் மறுஅலங்காரப் பணிகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வீட்டின் ஒரு பகுதிக்கு மீண்டும் சாயம் பூசப்பட்டிருப்பது அத்தகைய பணிகளில் அடங்கும்.
‘எமரல்ட் ஹில்’ எனும் சீன நாடகத் தொடருக்காக படப்பிடிப்பு நடத்த அந்த பங்களா வீட்டை மீடியாகார்ப் வாடகைக்கு எடுத்துள்ளது.
அந்த வீட்டின் சன்னல்களையும் மாற்றிய மீடியாகார்ப், அலங்காரக் கற்களுடன் காட்சியளிக்க அதன் முகப்பை அலங்கரித்திருந்தது.
அந்த வீட்டில் படப்பிடிப்புத் தலத்தைச் சுற்றி காட்டுவதற்காக ஜூன் 7ஆம் தேதி ஊடகங்களுக்கு மீடியாகார்ப் ஏற்று நடத்திய நிகழ்வின்போது அந்த மாற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
மரபுடைமை பாதுகாப்புச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கருத்து கிடைத்ததைத் தொடர்ந்து, நகர மறுசீரமைப்பு ஆணையம் ஜூன் 18ஆம் தேதி அந்த இடத்தை ஆய்வு செய்தது.
அந்த மாற்றங்கள் “இயல்பிலேயே மேலோட்டமானவை” என்பதால் பங்களா வீட்டின் அசல் நிலையைப் பாதிக்கவில்லை என்ற அடிப்படையில் அவற்றை ஆணையம் அனுமதித்தாலும், அத்தகைய பணிகளுக்கு அனுமதி கோரப்பட வேண்டும் என்று மீடியாகார்ப்புக்கு அது நினைவூட்டியது.
மற்றபடி, அனுமதி பெறாமல் அந்த வீட்டில் செய்த பணிகளுக்காக மீடியாகார்ப் தண்டிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த இரண்டு மாடி பங்களா வீடு, 1899ஆம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்டது. கெப்பல் ஹார்பர் நீர்ப்பகுதியை நிர்வகித்த ‘நியூ ஹார்பர் டோக் கம்பெனி’யின் மேலாளர் அங்கு தங்கவைக்கப்பட்டார். அந்த வீடு 2005ல் பாதுகாக்கப்பட்டது.