மாதந்தோறும் தூக்கி எறியப்படும் பல்லாயிரக்கணக்கான மருந்துப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் நோக்கில், டான் டோக் செங் மருத்துவமனை புதிய மருந்து அட்டைப் பெட்டிகளை வடிவமைத்துள்ளது.
ஒளிபுகும் நெகிழிப் படலம் கொண்ட பெட்டிகளுக்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யக்கூடிய, முழுமையான அட்டையாலான மருந்துப் பெட்டிகளைப் படிப்படியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக டான் டோக் செங் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இருவேறு பொருள்களாலான பெட்டிகளை மறுசுழற்சி செய்ய முடியாது. ஒற்றைப் பொருளாலான பெட்டிகளைப் பயனாளர்கள் நீல நிறக் குப்பைத் தொட்டியில் போடமுடியும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று சுகாதாரக் குழுமங்களைச் சேர்ந்த 16 பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்களில் வாங்கப்படும் மருந்து அட்டைப் பெட்டிகளைப் பயனர்கள் முறையாகத் திருப்பியளித்தால், ஏறத்தாழ 4.6 மில்லியன் பெட்டிகளை மறுசுழற்சி செய்யமுடியும்.
அந்த நெகிழிப் படலத்தை நீக்குவதன்மூலம் ஆண்டுதோறும் 1,837 கிலோ பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.
“இப்படலம் நீக்கப்படுவதால், ஏறத்தாழ $400,000 சேமிக்கப்படுகிறது. முறையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இம்மாற்றம் மருந்தகச் செயல்பாடுகளிலும் நோயாளிகளின் பயன்பாட்டிலும் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும்,” என்றார் டான் டோக் செங்கின் மூத்த மருந்தாளர் அலிசியா லின்.
“சுகாதாரத் துறையில் பொதுவாக நோயாளிப் பாதுகாப்பிலும் பணியிடத் திறனிலும் கவனம் செலுத்தப்படும். தற்போது அன்றாடப் பயன்பாடுகளில் பொருள் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது,” என்றார் அவர்.
பயன்பாட்டுக்கு எளிதாகவும் மருந்தகத்தில் அவற்றை இயந்திரங்கள் கையாள ஏதுவாகவும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டதையும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து வெவ்வேறு வடிவமைப்புகளைத் தொடர்ந்து, தற்போது புதிய அட்டைப்பெட்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மருந்துகளின் அளவுக்கேற்ப பத்து வெவ்வேறு அளவுகளில் இப்பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஈராண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, பயன்பாட்டுக்கு வந்துள்ள இம்மாற்றத்தை முன்னெடுத்த அணி, டான் டோக் செங் மருத்துவமனையின் பூமி தின விழாவில் விருதுகளையும் வென்றது.
புதன்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற முதல் நீடித்த நிலைத்தன்மை விருது வழங்கும் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் தாக்கம், அன்றாட நடைமுறையில் நீடித்த நிலைத்தன்மை ஆகிய இரு விருதுகளை அது வென்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
“நீடித்த நிலைத்தன்மையின் தொடர்பில் டான் டோக் செங் மருத்துவமனை கொண்டுள்ள கடப்பாடு, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு எவ்வாறு உயர்தரப் பராமரிப்பு, உன்னதச் செயல்பாடுகள், புத்தாக்கம் ஆகியவற்றுடன் கைகோத்துச் செல்லமுடியும் என்பதைக் காட்டியுள்ளது,” என்று அவர் பாராட்டினார்.
“வரும் ஆண்டுகளில், பருவநிலை மாற்றத்திற்குச் சிங்கப்பூரைத் தயார்படுத்தும் உத்திகளை ஆராய, வெவ்வேறு துறைகளுடனும் சமூகங்களுடனும் ஈடுபாட்டு முயற்சிகளை அதிகரித்து ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மருந்துகள் வீணாவதைத் தடுக்கும் ‘ப்ரைம் மெட்மேட்ச்’ (PRIME_MedMatch)
மருந்து அட்டைகளின் மறுவடிவமைப்புடன் மருந்துகள் வீணாவதைக் குறைக்கவும் ‘மெட்மேட்ச்’ எனும் முன்னோடித் திட்டத்தை மருத்துவமனை செயல்படுத்தியுள்ளது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், நீண்ட காலப் பயன்பாட்டிற்காக அதிக அளவிலான மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது வழக்கம்.
அவர்களின் உடல்நிலை மாறி, புதிய மருந்துகளுக்கு மாறவேண்டிய தேவை ஏற்படும்போது, பழைய, பொருத்தமற்ற மருந்துகள் வீணாகின்றன.
அதனைத் தடுக்கும் விதமாக மருத்துவமனையின் சமூகச் சுகாதாரக் குழுக்கள் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்குப் பயன்படாத, நல்ல, புதிய நிலையில் உள்ள மருந்துகளைப் பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கின.
மார்ச் 2025 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 124 வகைகளில் உள்ள 44,104 மருந்துகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து பெறப்பட்ட மருந்துகளை உரிய பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தியபின் அவற்றில் 3,869 மருந்துகள் உரிய நோயாளிகளிடம் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை கூறியது.
அந்த அணுகுமுறை, வழங்குநர், பெறுநர் இருவரின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட்டது.
இது, தற்போது மருத்துவக் குழுவினர் வீட்டிற்குச் சென்று பார்வையிடும்போது மட்டுமே மேற்கொள்ளப்படுவதை மருத்துவமனைக் கோடிகாட்டியது.
இந்நிலையில், பூமி தினக் கொண்டாட்டங்களில் மருத்துவமனை தனது நீடித்த நிலைத்தன்மை அறிக்கையையும் வரைவுத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

