அடுத்த மாத மத்தியில் (2026 ஜூலை) முன்னோடித் தலைமுறையினர் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் 300 வெள்ளி முதல் 1,200 வெள்ளி வரையிலான நிரப்புதொகையைப் பெறுவர்.
மொத்தமாக 145 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிரப்புதொகை வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
1949 அல்லது அதற்குமுன் பிறந்த முன்னோடித் தலைமுறையினருக்கான மெடிசேவ் நிரப்புதொகை 2014ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. அத்திட்டத்தின்மூலம் இதுவரை 450,000 பேர் பயனடைந்துள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கை கூறியது.
ஜூலை மாத மத்தியில், 92 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 1,200 வெள்ளியும், 87 முதல் 91 வயதுடையோர் 700 வெள்ளி நிரப்புதொகையும் பெறுவர். 82 முதல் 86 வயதுடையோர் 500 வெள்ளியும் 77 முதல் 81 வயதுடையோர் 300 வெள்ளி நிரப்புதொகையும் பெறுவர்.
இந்த நிரப்புதொகை, தகுதிபெறும் முன்னோடித் தலைமுறையினரின் மத்திய சேமநிதிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
இந்த நிரப்புதொகை, முன்னோடித் தலைமுறையினருக்கான மெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்த ஆதரவாக அமையும்.
முன்னோடித் தலைமுறையினரின் சேமிப்பு, குறைந்த வயதுடையோரைவிடக் குறைவு என்பதையும், வருடாந்தர மெடிஷீல்டு லைஃப் சந்தா செலுத்த அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிய அமைச்சு அதனால் அவர்கள் கூடுதல் நிரப்புதொகையைப் பெறுவர் என்று குறிப்பிட்டது.
1934ஆம் ஆண்டுக்குமுன் பிறந்தோருக்கான சந்தாக் கட்டணம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், 1935 முதல் 1949 வரை பிறந்தோரின் சந்தாக் கட்டணத்தில் மூன்றில் இரு பங்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சின் அறிக்கை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயக்கோளாறு எனப் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நிர்வகிப்பதற்காக மெடிசேவ் தொகையைப் பயன்படுத்துகிறார் 78 வயதாகும் ஃபெங்கரைசிஸ் சி பி ராக்கி (Fangerises s/o C P Rocky).
தமது மனைவி, மகளுடன் பீஷான் வட்டாரத்தில் குடியிருக்கும் அவர் முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர். “நான் மாதந்தோறும் மருத்துவமனை செல்லவேண்டும். அவ்வப்போது ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.
“மருத்துவச் செலவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. பரிசோதனை தொடங்கி மாதாந்தர மருந்துகள் வரை அனைத்திற்கும் மெடிசேவ் தொகை பயன்படுத்தப்படுவதால் அவ்வபோது நான் நிரப்புதொகை செலுத்துகிறேன். இந்நிலையில் முன்னோடித் தலைமுறையினர்க்குக் கூடுதல் நிரப்புதொகை கிடைப்பது சிறப்பானது,” என்றார்.
ஜூன் மாதத்திற்கு முன்னர் தங்கள் சிங்பாஸ் கணக்கில் கைப்பேசி எண்களைப் பதிவு செய்துள்ளோர்க்கு, ஜூன் 15ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி வாயிலாக நிரப்புதொகை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும். ஏனையோர் ஜூன் மாத இறுதிக்குள் கடிதம் வாயிலாகத் தகவல் பெறுவர்.


