இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்திர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அனைத்துலக விவகாரங்களுக்கான சிங்கப்பூர் கழகத்தின் (Singapore Institute of International Affair -எஸ்ஐஐஏ) ஜூலை 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை, புகைமூட்டம் ஏற்பட்டால், அது நீடித்திருக்காது என்றும் கூறியுள்ளது.
ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கழகம், சந்தைகள், பருவநிலை, கொள்கைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது.
இந்த வட்டாரத்தின் விவசாயப் பொருள்களில் செம்பனை எண்ணெய் (பாமாயில்), காகிதம் போன்றவற்றின் விலை இந்த ஆண்டு உயர்ந்துள்ளன. மேலும் இந்தோனீசியாவில் காடழிப்பு 2023 முதல் 2024 வரை அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை சுட்டியது.
காடழிக்க பயிர்களை எரிப்பது, காட்டுத் தீயை உண்டாக்கி அதன் மூலம் புகை மூட்டம் ஏற்படுவது போன்றவையும் நடக்கலாம்.
வறண்ட வானிலை, இந்தோனீசியா அறிவித்துள்ள புதிய உணவு, எரிசக்தித் திட்டங்கள் ஆகியவையும் காட்டுத் தீயை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று நிலைகளில் எல்லை தாண்டிய புகைமூட்ட அபாயத்தை எஸ்ஐஐஏ மதிப்பிடுகிறது. பச்சை குறைந்த ஆபத்தையும், சிவப்பு அதிக ஆபத்தைக் குறிக்கிறது.
சென்ற ஆண்டு குறைந்த ஆபத்து நிலையிலிருந்து இந்த ஆண்டு நடுத்தர ஆபத்தாக உயர்ந்துள்ள மதிப்பீடு கவலை தரும் மாற்றம் என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவில் சுமத்ராவின் சில பகுதிகளில் ஜூலை மாத நடுப்பகுதியில் வெப்பமான பகுதிகளின் அதிகரிப்பும், புகை மூட்டமும் காணப்பட்டன. புகைமூட்டம் மலேசியாவின் சில பகுதிகளுக்குப் பரவியது. எனினும் சாதகமான காற்றின் திசை காரணமாக சிங்கப்பூர் பாதிக்கப்படவில்லை.
இந்தோனீசியாவின் வானிலை, பருவநிலை, புவியியல் ஆய்வு முகவையின் அறிக்கையின்படி, சுமத்ராவில் காட்டுத் தீ ஏற்படக்கூடிய கடும் வெப்பத்தைக் கொண்ட இடங்களின் எண்ணிக்கை ஜூலை மாதத்தின் 10 நாட்களில், 94 லிருந்து 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அடுத்த சில நாட்களில் தெற்கு ஆசியான் வட்டாரத்தில் வறண்ட நிலைமை நீடிக்கும் என்றும் மத்திய, தெற்கு சுமத்ரா, ஜாவா, போர்னியோவின் வடகிழக்கு பகுதிகளில் சிறிதளவு மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
குறிப்பாக போர்னியோவின் வறண்ட நிலைமை, அதிக வெப்பமான இடங்கள், புகை மூட்டம் ஆகியவற்றை அதிகரிக்கக்கூடும், எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று வாரியம் குறிப்பிட்டது.