வெளிநாட்டு ஊழியர்களின் தங்குவிடுதிக்கே நேரில் சென்று சேவை வழங்கும் தாதியர்

2 mins read
93f6a89d-c0ba-421c-ab0a-a69314cd91ff
(இடமிருந்து) திருவாட்டி வீ சென் பிங், திருவாட்டி ஐலீன் இங், திருவாட்டி ஹேமா தேவி சந்திரன் மூவரும் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ தாதியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கிடையே, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் உறுதியளித்தல், பராமரிப்பு, ஈடுபடுத்துதல் குழுமம், மூன்று தாதியரைக் கொண்ட பராமரிப்புக் குழுவை அமைத்தது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்குவது அதன் நோக்கம்.

தாதியரான திருவாட்டி வீ சென் பிங், திருவாட்டி ஐலீன் இங், திருவாட்டி ஹேமா தேவி சந்திரன் மூவரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து தங்குவிடுதிக்குத் திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு, சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்பை இவர்கள் வழங்குகின்றனர்.

ஒரு மாதத்தில் சராசரியாக, மூவரும் சேர்ந்து மொத்தம் ஏறக்குறைய 50 பேருக்கு இத்தகைய பராமரிப்பை வழங்குவதாகக் கூறப்பட்டது.

வேலையிடக் காயம், நாட்பட்ட நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர்கள் போன்றோர் அவர்களில் அடங்குவர்.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு காயம் குணமாகும் வரையிலான பராமரிப்பு, மருந்துகள், உடற்பயிற்சி உள்ளிட்ட ஆரோக்கியப் பழக்கங்கள் ஆகியவை குறித்து, மூன்று தாதியரும் கற்றுத் தருகின்றனர்.

கொவிட்-19 பெருந்தொற்று வெளிநாட்டு ஊழியர் சமூகத்தின் சுகாதாரப் பராமரிப்பு மீள்திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக, ‘ஏஸ்’ குழுவிற்கும் மனிதவள அமைச்சின் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்புப் பிரிவிற்கும் தலைமை மருத்துவரான டாக்டர் லீ ஹியோவ் யோங் கூறினார்.

அவர்களுக்கான முதன்மை சுகாதாரப் பராமரிப்பு முறையை அமல்படுத்துவதோடு சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்புக்கான தேவையையும் உணர்ந்ததால் ‘ஏஸ்’ குழுமம், இந்தத் தாதியர் குழுவை அமைத்ததாக டாக்டர் லீ சொன்னார்.

தாதியர் மூவருமே திருமணமாகி, பிள்ளைகளுக்குத் தாயாய் இருப்பவர்கள்.

38 வயதாகும் திருவாட்டி இங், 14 ஆண்டுகள் பொது மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியவர்.

திருவாட்டி ஹேமா தேவி சந்திரன், 38, பொது மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் பணியாற்றியவர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

ஆண்களே அதிகம் வசிக்கும் தங்குவிடுதிக்குச் செல்ல வேண்டும் என்றதும் இவரது பாதுகாப்புக் குறித்து முதலில் கணவர் தயங்கினார்.

ஆனால், “சக மனிதர்களான அவர்களுக்கும் குடும்பம் உண்டு. நம்பிக்கைகளும் கனவுகளும் உண்டு. அவர்களும் பராமரிக்கப்பட வேண்டியவர்களே,” என்று கூறும் திருவாட்டி ஹேமா, சில கருத்துகள் ஆதாரமற்றவை என்பதைத் தானும் தன் குடும்பத்தினரும் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

குழுவின் மூன்றாவது தாதி, 52 வயது திருவாட்டி வீ. அறுவை சிகிச்சை அரங்கில் பணியாற்றியவர்.

நோய்வாய்ப்பட்டு தங்குவிடுதியில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் மனம்விட்டுக் கவலைகளைப் பகிர்ந்தபோது கவனத்தோடு செவிமடுத்து, உரிய ஆறுதல் கூறி, பராமரிப்பு முறைகளையும் கற்றுத்தந்த இம்மூவருமே, ஊழியர்கள் குணமடைந்த பிறகு அவர்கள் நன்றி கூறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்