சிங்கப்பூரின் உயர் தொழில்நுட்பப் பண்ணைத் துறைக்கு மேலுமொரு ஒரு பாதிப்பு என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
உள்ளூர் உட்புறப் பண்ணையான ‘ஐ.எஃப்.எஃப்.ஐ’, துவாசில் உள்ள 38,000 சதுர மீட்டர் பரப்பளவிலான அதன் மிகப் பெரிய வளாகத்தை மூடியுள்ளது.
ஆண்டுக்கு ஏறக்குறைய 300 டன் காய்கறிகளை உற்பத்திசெய்யும் ஆற்றல் அதற்கு உண்டு என்று கூறப்படுகிறது.
‘ஐ.எஃப்.எஃப்.ஐ’ஐ நடத்திவந்த துல்லியப் பொறியியல் நிறுவனமான ‘ட்ரான்ஸ்பிளஸ்’ 2023ஆம் ஆண்டு நவம்பரில் நொடிப்பு நிலைக்குத் தாக்கல் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
‘நெக்ஸ்ட் ஃபார்மர்ஸ்’ என்ற பெயரில் அந்த நிறுவனம் பல்வேறு காய்கறிகளை உற்பத்தி செய்தது. முன்னதாக அந்தக் காய்கறிகளை ‘ஃபேர்பிரைஸ்’ பேரங்காடிகளில் வாங்கலாம்.
‘ஸ்பேஸ்@துவாஸ்’ பகுதியில் அமைந்துள்ள பண்ணையிலிருந்து ‘ஐ.எஃப்.எஃப்.ஐ’ வெளியேறிவிட்டதாகவும், அந்த வளாகத்தை இவ்வாண்டு ஏப்ரலில் ஜூரோங் நகராண்மைக் கழகத்திடம் அது திரும்பக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில், கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தின்போது உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவ, சிங்கப்பூர் உணவு அமைப்பு $39.4 மில்லியன் பெறுமான மானியங்களை ஒன்பது பண்ணைகளுக்கு வழங்கியது. அவற்றில் ஒன்று, ‘ஐ.எஃப்.எஃப்.ஐ’.
அந்தப் பண்ணைக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைப்பு பதில் அளிக்கவில்லை. இருப்பினும், ‘ஐ.எஃப்.எஃப்.ஐ’யின் நிதி அறிக்கையிலிருந்து, பண்ணையின் கட்டுமானத்திற்கு அது குறைந்தது $2.9 மில்லியன் பெறுமான ரொக்க மானியத்தைப் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட, பூச்சிக்கொல்லி இல்லாத சுற்றுப்புறத்தில், பெரிய அளவிலான உயர் தொழில்நுட்பப் பண்ணையைக் கட்டுவதற்கு, ‘ஐ.எஃப்.எஃப்.ஐ’ நிதியுதவி பெற்றதாக 2020ஆம் ஆண்டில் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

