சிங்கப்பூரில் நான்கு வயதுச் சிறுமி மேகன் குங்கைத் துன்புறுத்திக் கொலைசெய்த வழக்கில் 36 வயதுப் பெண்ணுக்கு 13 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமியின் தாய், தாயின் காதலன் ஆகியோருடன் இணைந்து நௌவெல் சுவா ருவோஷி சதித்திட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் சிறுமி துன்புறுத்தப்பட்டதைப் படம்பிடித்தார். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு இப்போது தண்டனை விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி கடுமையாகத் தாக்கப்பட்டதால் மேகன் மாண்டார்.
அதன்பின்னர், மூவரும் மேகனின் உடலை மே 8ஆம் தேதி கார் பட்டறை ஒன்றில் இரும்புப் பீப்பாயில் இட்டு எரித்தனர். சிறுமியின் அஸ்தி இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சுவா ஆவார்.
2025 ஏப்ரல் மாதத்தில் சிறுமியின் 31 வயது தாய் ஃபூ லீ பிங்கிற்கு 19 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமிமீது கொடிய தாக்குதலை நடத்திய தாயின் 40 வயதுக் காதலன் வோங் ஷி சியாங்கிற்கு 30 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அவர்மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இருந்தன.
ஓராண்டுக்கும் மேலாக மேகன் துன்புறுத்தப்பட்டார். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் துன்புறுத்தப்பட்டார்.
அந்த ஆண்டு மார்ச் மாதம் மேகனின் உடலில் காயங்களைக் கண்ட பள்ளி ஊழியர்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்கப்படும் என அவரது தாயை எச்சரித்தனர்.
சிறுமி தாக்கப்பட்டுக் கடுமையாக வலியில் துடித்தபோது சுவா கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஃபூ, வோங் ஆகியோருடன் இணைந்து அவர் போதைப்பொருள் உட்கொண்டார்.
சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்ததால் பிரம்பால் அடிக்கப்பட்டார். பின்னர் அவர்கள் சிறுமிக்கு உணவளிக்கவும் மறுத்தனர்.
சிறுமி மாண்ட பிறகு அடுத்த சில மாதங்களுக்கு மூவரும் தங்கும் விடுதிகளில் வசித்து உடலை எப்படி அழிப்பது எனத் திட்டமிட்டனர்.
மேகன் காணாமல் போனது தொடர்பில் 2020 ஜூலை 20ஆம் தேதியன்று அவரது தந்தை குங் வெய் நான் காவல்துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து 2020 ஜூலை 24ஆம் தேதியன்று மூவரும் கைது செய்யப்பட்டனர்.
