சிங்கப்பூர் காவல்துறையும் அமெரிக்க ‘எஃப்பிஐ’யும் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிங்கப்பூர் காவல்துறையும் அமெரிக்க ‘எஃப்பிஐ’யும் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 mins read
ccf1f99a-0c5f-4752-9e24-ee0b77cf88fb
சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணை, உளவுத்துறைப் பிரிவின் துணை ஆணையர் வாங் வெய்ஹான் (இடது), அமெரிக்க எஃப்பிஐ அமைப்பின் குற்றவியல் பிரிவுக்கான துணை இயக்குநர் ஹீத் ஆர் ஜென்கி. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கள்ளப்பணப் பரிமாற்றம், இணைய மோசடி போன்ற குற்றங்களை இணைந்து கையாள சிங்கப்பூர் காவல்துறை, அமெரிக்காவின் குற்றவியல் விசாரணை அமைப்பான ‘எஃப்பிஐ’யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயூ) ஒன்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, இணையக் குற்றங்கள், மின்னிலக்க முறையில் நடக்கும் ஏமாற்று சம்பவங்கள், கள்ளப்பணப் பரிமாற்றம் போன்ற பலவகை மோசடிகள்மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணை, உளவுத்துறைப் பிரிவின் துணை ஆணையர் வாங் வெய்ஹான், அமெரிக்க எஃப்பிஐ அமைப்பின் குற்றவியல் பிரிவுக்கான துணை இயக்குநர் ஹீத் ஆர் ஜென்கி ஆகிய இருவரும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

கையெழுத்து நிகழ்வு, சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்தது.

சிங்கப்பூர் காவல்துறையும் அமெரிக்க அமைப்பும் செய்துள்ள ஒப்பந்தம், இரு தரப்பும் பகிரும் வலுவான பங்காளித்துவத்தையும் கடப்பாட்டையும் எடுத்துரைக்கிறது.

இரண்டு நாடுகளின் குடிமக்களைக் குறிவைத்து செயல்படும் குற்றக் கும்பல்களைத் தடுத்து அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் ஒருங்கிணைந்த கடப்பாட்டை ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது என்று சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

இவ்விரு அமைப்புகளுக்கும் நீண்ட நெடிய நல்லுறவு இருந்துவந்துள்ளது என்ற காவல்துறை, அனைத்துலக குற்றக்கும்பல்களை முறியடிக்க இரு தரப்பும் பல கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்ததை அதன் அறிக்கையில் நினைவூட்டியது. அவற்றில் தகவல் பரிமாற்றம், பயிற்சிகள், திறன் மேம்பாடு, தேவைப்படும்போது உதவுவது போன்றவை உள்ளடங்கும்.

ஜுலை மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் காவல்துறையின் இணையப்பிரிவுத் தளபத்தியம், எஃப்பிஐயுடன் இணைந்து S$3.5 மில்லியன் மதிப்புள்ள பன்னாட்டு மின்நாணய (கிரிப்டோ கரன்சி) மோசடியைத் தடுத்துள்ளது.

தகவல் பரிமாற்றத்தாலும் நிகழ்நேரத்தில் இயங்கும் உளவுத் துறை நடைமுறைகளாலும் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் 54 பேர் மோசடிகளில் ஏமாறுவதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

மோசடிகள், கள்ளப்பணப்பரிமாற்றம் போன்ற எல்லைகள் கடந்த குற்றங்களில் இருந்து உலகின் இருபுறங்களில் உள்ள மக்களைக் பாதுகாக்க செயலாற்றும் இரு அமைப்புகளின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை இந்த பங்காளித்துவம் வெளிப்படுத்துகிறது என்று திரு சாங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 2019முதல் மோசடிக் குற்றங்களில் $4 பில்லியனுக்குமேல் மக்கள் இழந்துள்ளதால் அது மிகவும் கவனத்துக்குரிய பிரச்சினையாகிவிட்டது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைஅமெரிக்காபங்காளித்துவம்ஒப்பந்தம்நிகழ்வுதூதரகம்