தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரிழந்த தேசிய சேவை வீரர்களுக்கு நினைவுச் சின்னம்

2 mins read
40c2366c-b2b9-4d0e-aa6e-2aeefe815e4a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பணியில் உயிரிழந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரநிலை வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் நினைவகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் முக்கிய அம்சமாக இடம்பெறும் கறுப்பு சலவைக்கல்லால் நீள்சதுர நினைவுச் சின்னத்தை சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று (மே 5) திறந்து வைத்தார்.

2006ஆம் ஆண்டில் 24 வயது சார்ஜண்ட் ஷேக் அம்ரான் ஷேக் ஜமால் வாகன விபத்தில் பலியாகினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 வயது முதல் சார்ஜண்ட் எட்வர்ட் கோ ஹெண்டர்சன் சாலை தீ விபத்தில் இறந்தார்.

பணியில் சேவையாற்றிய நேரத்தில் உயிரிழந்த இவர்களின் பெயர்கள் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மழையைப் பொருட்படுத்தாமல் மரியாதை செலுத்த இவர்களின் குடும்பத்தாரும் சேர்ந்து பணியாற்றியவர்களும் நிகழ்விற்கு வந்தனர்.

சிங்கப்பூருக்காக உயிர்த் தியாகம் செய்த இவர்களை இந்த சின்னம் கௌரவிக்கிறது என்றும் முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு முழுநேர வீரர்களைப் போல பயிற்சிகளும் மதிப்பீடுகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.

"சிங்கப்பூரின் சிறிய மக்கள்தொகை, மனிதவளம் ஒரு சவாலாக இருந்து வருகிறது. சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முழுநேர தேசிய சேவையாளர்கள் பங்களிக்கின்றனர்," என்று திரு சண்முகம் விவரித்தார்.

நினைவுச் சின்னத்தில் 'எல்இடி' வகை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நினைவுச் சின்னத்தின் கீழ் பகுதியில் நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் வலிமை, தைரியம் போன்ற பண்புகளை எடுத்துக்காட்டுகிறது இந்தச் சின்னம்.

அனைத்துலக தீயணைப்பு வீரர்கள் தினத்தை ஒட்டி, எண் 62 ஹில் சாலையில் உள்ள குடிமைத் தற்காப்பு மரபுடைமை காட்சிக்கூடத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த நினைவுப் பூங்காவைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்