தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் வாங்கியதையும் கொடுத்ததையும் ஒப்புக்கொண்ட ஆடவர்கள்

2 mins read
41b3a575-cb4a-4962-85a4-7a61883aa9e3
2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோ மெங் குவீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இன்று (ஆகஸ்ட் 29) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கோ மெங் குவீ, 53, எனப்படும் அவர், பொறியியல் சேவை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் இங் இயோ செங், 62, என்பவரிடம் இருந்து $20,000 பணத்தை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு அது.

கோ இதர 12 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார். அவற்றில் 10 குற்றச்சாட்டுகள் லஞ்சம் தொடர்பானவை, இதர இரு குற்றச்சாட்டுகள் 2017ஆம் ஆண்டு லஞ்சப் பணத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் பி200 கார் வாங்கியது தொடர்பானவை.

2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நீடித்த லஞ்ச ஊழல் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை $200,000க்கும் அதிகம்.

2021ஆம் ஆண்டு மண்டாய் வனவிலங்குக் குழுமம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுமுன் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தில் கோ பணியாற்றினார்.

அப்போது இங்கிற்குச் சொந்தமான அஸென்சன் எஞ்சினியரிங் சர்விசஸ் நிறுவனம் அந்தக் காப்பகத்தின் குத்தகையாளராக இருந்தது. காப்பகத்தின் மின்சாரப் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டது.

அந்த நிறுவனத்திற்கு காப்பகத்தில் சலுகைகளைப் பெறும் நோக்கில் கோவுக்கு லஞ்சம் தரப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். லஞ்சப் பணத்தைப் பெற்ற பின்னர் அந்த நிறுவனத்திற்குப் பணிகளை வழங்குமாறு தாம் பரிந்துரைத்ததை கோ எழுத்துபூர்வ வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.

அதேபோல, லஞ்சம் கொடுத்த குற்றத்தை இங் ஒப்புக்கொண்டார்.

தண்டனையைப் பெற அவ்விருவரும் நவம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றம் செல்வர். ஐந்தாண்டு வரையிலான சிறை, $100,000 வரையிலான அபராதம் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்