தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பிக்கப்பட்ட தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்சுக்கு மாறும் மெண்டாக்கி

2 mins read
a0b75d6e-42e3-4912-8c1f-d7a15bf0f970
கேலாங் சிராய் கலாசாரப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்ஸ் 2023ஆம் ஆண்டு மூடப்பட்டது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்ஸ் கட்டடம் புதுப்பிக்கப்பட்ட பிறகு 2029ஆம் ஆண்டில் மெண்டாக்கியின் தலைமையகம் அங்குச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் மெண்டாக்கியின் தலைவருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி அக்டோபர் 18ஆம் தேதி இதை அறிவித்தார்.

மெண்டாக்கி அங்கு மாறுவதால் விரிவான சேவைகளையும் கற்றல் வாய்ப்புகளையும் பயனாளர்கள் எளிதில் அடைய இயலும் என்றார் அமைச்சர் ஸுல்கிஃப்லி.

அதன் மூலம் கூடுதலான தடையற்ற ஆதரவுக்கு வகைசெய்யும் இடத்தை உருவாக்க முடியும்; தொடர்புகளைப் பேணி, மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த இயலும் என்றார் அவர்.

மெண்டாக்கி தலைமையகமும் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் முஸ்லிம் சமய மன்றத்தின் அலுவலகமும் அக்கட்டடத்தின் நான்காவது மாடியில் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே கூரையின்கீழ் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்ற மெண்டாக்கி எண்ணம் கொண்டுள்ளது.

துணைப்பாட வகுப்புகள், வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும், அறிவைப் போற்றுவோம் எனப் பொருள்படும் ‘ரய்கான் இல்மு’ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு மெண்டாக்கி அங்கு ஏற்பாடு செய்ய முடியும்.

கேலாங் சிராய் பகுதியில் மெண்டாக்கி தலைமையகம் அமைந்திருக்கையில் கூடுதலான சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதால் இடமாற்றத்தை வரவேற்பதாக மெண்டாக்கி அமைப்பினர் கூறினர்.

பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த இடத்தில் செயல்படுவதற்கும் தேசிய நூலக வாரியத்துடனும் மக்கள் கழகத்துடனும் ஒத்துழைக்கும் வாய்ப்பிற்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக, தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்ஸ் கட்டடத்தை 30 ஆண்டுக் குத்தகையில் விற்பனைக்கு விடுவதாக சிங்கப்பூர் நில ஆணையம் அக்டோபர் 18ஆம் தேதி அறிவித்தது.

கட்டடத்திற்குப் புத்துயிரூட்டும் வேளையில் அதன் கலாசார வளத்தைப் பாதுகாக்கும் பரிந்துரைகளுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.

கேலாங் ஈஸ்ட் பொது நூலகமும் அங்கு இடமாறும். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்