தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெண்டாக்கி துணைப்பாடத் திட்டத்தின் பதிவுக் கட்டணம் நீக்கம்

3 mins read
ffcf8b1d-20a6-47e9-a9fd-f4fd6ffdf6fc
மெண்டாக்கி தனது துணைப்பாடத் திட்டத்துக்கான $10 பதிவுக் கட்டணத்தை நீக்கவுள்ளது. - படம்: மெண்டாக்கி
multi-img1 of 2

மலாய்/முஸ்லிம் சமூக மேம்பாட்டு மன்றமான மெண்டாக்கி தனது துணைப்பாடத் திட்டத்துக்கான $10 பதிவுக் கட்டணத்தை நீக்குவதாக திங்கட்கிழமை (நவம்பர் 3) அறிவித்துள்ளது.

இந்த மாற்றம், 2026 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் விளைவாக, 2025 டிசம்பர் 1 முதல் மெண்டாக்கி துணைப்பாடத் திட்டத்தில் சேரும் அனைத்து மலாய்/முஸ்லிம் மாணவர்களும் எந்தப் பதிவுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

இதற்கு முன்னர், 2022ல் பதிவுக் கட்டணம் $210லிருந்து $10ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு அடுத்த படியாக எடுக்கப்பட்டதாக மெண்டாக்கி தெரிவித்தது.

இது, தரமான கல்வி ஆதரவை மேலும் எளிதாகவும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் மெண்டாக்கியின் தொடர் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

1982ல் தொடங்கப்பட்ட மெண்டாக்கி துணைப்பாடத் திட்டம், சிங்கப்பூரில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மதராஸா பள்ளிகளைச் சேர்ந்த மலாய்/முஸ்லிம் மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

தொடக்கநிலை 1 முதல் உயர்நிலை 5 வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகளிலும் திட்டங்களிலும் இலவசமாகப் பங்கேற்கலாம்.

தற்போது சிங்கப்பூரில் 100 நேரடி, மின்னிலக்கத் தளங்களில் இத்திட்டம் இயங்கி வருகிறது. 2025ல் மட்டும் கிட்டத்தட்ட 9,700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது ஆதரவளித்து வருகிறது.

“சிறு தொகையாக இருந்தாலும், செலவுகள் குவியும்போது சில குடும்பங்களுக்கு அது சுமையாகலாம் என்பதை நாங்கள் அறிகிறோம்.

“நிதி உதவிக்கான வழிகள் இருந்தாலும், சிலர் அவற்றைப் பற்றி அறியாமலோ அல்லது உதவி கேட்கத் தயக்கத்துடன் இருப்பதாலோ அதனைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்,” என்று மெண்டாக்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிரோஸ் அக்பர் கூறினார்.

மெண்டாக்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிரோஸ் அக்பர்.
மெண்டாக்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிரோஸ் அக்பர். - படம்: பெரித்தா ஹரியான்

இந்தக் கட்டணத்தை நீக்குவதன் மூலம், பதிவுச் செயல்முறையை மேலும் எளிதாக்கி, அதிகமான மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்க விரும்புவதாகவும் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி ஆதரவிலிருந்து பயனடையும் வாய்ப்பை உறுதிசெய்வதே தங்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் மாணவர் சேர்க்கை 35 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஃபிரோஸ், மின்னணு எதிர்காலத்திற்காக மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை மெண்டாக்கி தனது பாடத்திட்டத்தில் இணைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இல்லத்தரசியும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயாருமான 43 வயது நோர்லிசா முகம்மது யூசுப்புக்கு இந்த மாற்றம் ஒரு வரவேற்கத்தக்க செய்தியாகும். 2013 முதல் மெண்டாக்கியில் பயனாளியாக இணைந்துள்ள இவரது இரண்டு பிள்ளைகளும் அடுத்த ஆண்டு இந்தப் புதிய மாற்றத்தால் பயனடைய உள்ளனர்.

இல்லத்தரசியும் மெண்டாக்கி பெற்றோர் பயனாளியுமான 43 வயது  நோர்லிசா முகம்மது யூசுப்பும் இவரின் இரண்டு மகள்களும்.
இல்லத்தரசியும் மெண்டாக்கி பெற்றோர் பயனாளியுமான 43 வயது நோர்லிசா முகம்மது யூசுப்பும் இவரின் இரண்டு மகள்களும். - படம்: பெரித்தா ஹரியான்

“இது உண்மையில் மிகவும் உதவியாக இருக்கும். $10 என்பது மற்றவர்களுக்குப் பெரிய தொகையாகத் தெரியாமல் இருக்கலாம் என்றாலும், என்னைப் போன்ற பெற்றோருக்கு இந்தத் தொகையை எங்கள் குழந்தைகளின் எழுதுபொருள்கள் அல்லது பிற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்,” என்று திருவாட்டி நோர்லிசா கூறினார்.

மெண்டாக்கி துணைப்பாடத் திட்டத்தில் சேர்ந்த பிறகு தம் பிள்ளைகளின் மதிப்பெண்கள் மேம்பட்டிருப்பதையும் அங்கு அவர்கள் பல நண்பர்களைப் பெற்றிருப்பதையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

பதிவு விவரங்களுக்கும் மேல் தகவல்களுக்கும் www.mendaki.org.sg என்ற மெண்டாக்கியின் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்