சிங்கப்பூரில் பத்து முதல் 14 வயது வரையுள்ளவர்களின் உடற்குறைக்கும் மரணத்துக்கும் மனநலக் கோளாறுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. அத்துடன், ஆசியான் வட்டாரத்திலேயே சிங்கப்பூர் மக்களின் உடல்நலத்தில், மனஉளைச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
லான்செட் பொதுச் சுகாதாரம் எனும் மருத்துவ சஞ்சிகை புதன்கிழமை (மே 28) வெளியிட்ட ஆய்வில் இத்தகவல்கள் இடம்பெற்றன.
2021ல், இங்கு மனநலக் கோளாறு ஆண்களிடையே 12.8 விழுக்காடாகவும் பெண்களிடையே 11.7 விழுக்காடாகவும் இருப்பதாக ஆய்வு கூறியது. அதே ஆண்டில் சிங்கப்பூரில் 653,000 பேருக்கு மனநலக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர். இந்த வயதுப் பிரிவில் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மும்மடங்காக அதிகரித்தனர்.
கொவிட்-19 தொற்றுநோயால் பதற்றமும் மன உளைச்சலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது, பொதுவான சுகாதாரப் பிரச்சினையாக இருந்தது. இது, முறையே சுமார் 185,000 மற்றும் 144,000 நபர்களைப் பாதித்தது என்றும் ஆய்வு தெரிவித்தது.
அதிகரித்து வரும் சமூக ஊடகத்தின் தாக்கம், கல்வி சார்ந்த அழுத்தம் ஆகியவை இளையர் மத்தியில் காணப்படும் மனநலன் சார்ந்த இடர்களுக்கு காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனநலக் கோளாறு, இதய நோய், புகைபிடித்தல், காயங்கள் ஆகிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆசியான் பொதுச் சுகாதார நெருக்கடி சார்ந்த நான்கு ஆய்வுகளில் இந்த ஆய்வறிக்கையும் ஒன்று.
இந்த ஆய்வு, 2021 உலக அளவில் நோய் பாதிப்புகளை ஆராயும் ஆய்வின் ஒரு பகுதியாகும். உலகளவில் சுகாதார நிலவரங்களை ஆராயும் ஒரு பெரிய அளவிலான முயற்சி இது.
இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியும் (என்யுஎஸ் மருத்துவம்) மற்றும் ஆய்வுக்கு தலைமைத் தாங்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள், மதிப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முதல் கூட்டு ஆய்வு ஒத்துழைப்பாகும்.