மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் ஆயுதப் படை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சினைகளால் பாதிப்புக்குள்ளாகும் சிங்கப்பூர் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
இதை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் மனநலக் கொள்கைகளைப் புதுப்பித்து காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க பொதுத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மூத்த மனநல மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் தங்கள் மன ஆற்றலுக்கு ஏற்றவாறு, தகுந்த பிரிவுகளில் சேவையாற்றுவதை உறுதி செய்ய சிங்கப்பூர் ஆயுதப் படையின் மனநல மருத்துவ வகைப்பாடுகளுக்குத் தேவையான மாற்றங்களை இந்தத் தொண்டூழியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தத் தகவலை சிங்கப்பூர் ஆயுதப் படையின் மனநல நிபுணத்துவ ஆலோசனைப் பிரிவின் உறுப்பினரான டாக்டர் கிறிஸ்டஃபர் சியோக் செங் சூன் அக்டோபர் 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் இளையர்களில் கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் தங்கள் மனநலம் மிகவும் மோசமாக இருப்பதாக சுய மதிப்பீடு செய்துள்ளதாக மனநலக் கழகம், சுகாதார அமைச்சு ஆகியவை அண்மையில் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
387 தொண்டூழியர்களின் பங்களிப்பை அக்டோபர் 3ஆம் தேதியன்று தற்காப்பு அமைச்சு அடையாளம் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் மனநலக் கழகத்தின் தலைமை, மூத்த மனநல ஆலோசகரான (தடயவியல் மனநல மருத்துவம்) டாக்டர் சியோக்கும் ஒருவர்.
தேசிய சேவையாளர்களை அவர்களுக்குத் தகுந்த பிரிவுகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய சிங்கப்பூர் மனநல நிபுணத்துவ ஆலோசனைப் பிரிவும் மருத்துவ ஆலோசனைப் பிரிவும் உதவியுள்ளதாகத் தொண்டூழியர்களைக் கௌரவிக்கும் வகையில் பெரடோக்ஸ் சிங்கப்பூர் மெர்சன்ட் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்து உபசரிப்பில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறினார்.