மனநலமே மந்திரம்: புற்றுநோயை வென்ற ஆரத்தி தேவேந்திரன்

3 mins read
1d82f296-e14f-4a31-9774-faf1b83c40f9
தம்மை ஒரு நோயாளிபோலக் கருதாமல் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகக் கூறினார் ஆரத்தி. - படம்: ஆரத்தி தேவேந்திரன்

புற்றுநோய் ஏற்படுத்தும் உடல்வலியைவிட மனவலியை எதிர்கொள்வதே அதிக சவால் மிகுந்தது என்கிறார் 31 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து தற்போது மீண்டுவந்துள்ள ஆரத்தி தேவேந்திரன்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்தில் மேற்படிப்பை மேற்கொண்ட இவருக்கு புற்றுநோயுடனான தொடர்பு புதிதன்று.

தமது 18 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் தாயார் எதிர்கொண்ட சிரமங்களை அருகிலிருந்து கண்ணுற்ற இவருக்கு, அது குறித்த புரிதலும் அச்சமும் கூடவே இருந்தன.

“என் தாயார், என் உறவினர் ஒருவர் என புற்றுநோய் எதிர்கொண்டோரைப் பார்த்ததால் எனக்கு சுய பரிசோதனை குறித்த விழிப்புணர்வு இருந்தது. நானும் அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்வேன்,” என்றார் ஆரத்தி.

பணி காரணமாக அமெரிக்காவில் இருந்த ஆரத்தி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த வேளையில், தமது மார்பகப் பகுதியில் இயல்புக்கு மாறாகக் கட்டி இருப்பதைச் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் தம் தாயார் தாதிமைப் பணி மேற்கொண்ட கே கே மகளிர் சிறார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் ஆரத்தி.

பின்னர், சிங்கப்பூர் திரும்பிய அவர் புற்றுநோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டார். அடுத்த பத்து நாள்களில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

“புற்றுநோயாக இருக்கலாம் என்ற ஐயம் இருந்தபோது, அதனை மருத்துவர் உறுதிப்படுத்தியதும் மனம் உடைந்துபோனேன்,” என்றார் ஆரத்தி.

சிகிச்சை முடிந்து ஸ்பெயின் நாட்டில் விடுமுறையைக் கழித்த ஆரத்தி.
சிகிச்சை முடிந்து ஸ்பெயின் நாட்டில் விடுமுறையைக் கழித்த ஆரத்தி. - படம்: ஆரத்தி தேவேந்திரன்

மருத்துவர் கூறியபோது உடனிருந்த தாயாரும் கணவரும் வேதனையடைந்ததை உணர முடிந்ததாகக் கூறினார் ஆரத்தி.

அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இளவயது என்பதால் சிகிச்சைக்கு முன்னர் கருமுட்டையைப் பாதுகாக்க அவருக்கு ‘ஐவிஎஃப்’ சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.

அச்சிகிச்சைக்குப்பின் இரு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டார் ஆரத்தி.

“அதனையடுத்து நான்கு அமர்வுகள் ‘கீமோதெரபி’ மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் மொத்த சிகிச்சையிலும் வலிமிகுந்த காலகட்டம்,” என்றார் ஆரத்தி.

“உண்ணவும், உறங்கவும், நடக்கவும் முடியாது. எனக்கிருக்கும் வேதனையைத் தாண்டி என்னைப் பார்க்கும் என் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் பார்த்ததும், அதனை எதிர்கொள்வது எதிரிக்கும் வரக்கூடாத தருணம் என்றே சொல்வேன்,” என்று உணர்ச்சி மிகுதியுடன் அவர் சொன்னார்.

“என் தலைமுடி, புருவம் என அனைத்தும் கொட்டியது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது,” என்றார் அவர்.

சிகிச்சை காலகட்டத்தில் தமக்கு இருந்த மன அழுத்தத்தை நல்ல முறையில் கையாண்டது பல பிரச்சினைகளிலிருந்து தம்மைக் காத்ததாக ஆரத்தி குறிப்பிட்டார்.

பொதுவாக மன அழுத்தத்திற்கு ஆளாவோர் தமது உணர்வுகளைக் கோபமாக வெளிப்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், “பராமரிப்பாளர்கள் நமக்கு உதவ வேண்டும் என்றே நினைப்பார்கள். அவர்களிடம் கோபத்தை உமிழ்வதைவிட என்ன தேவை என்பதைச் சரியாக விளக்குவது அவர்களுக்கும் சரி, நமக்கும் சரி, நிம்மதியைத் தரும். அதுவே நான் கண்டறிந்து கடைப்பிடித்த தாரக மந்திரம்,” என்றார் அவர்.

மேலும், “சிகிச்சை காலங்களிலும், பணிக்குத் திரும்பிய பின்னரும் பணியிடத்தில் எனக்கு நல்ல ஆதரவு இருந்தது. பழையபடி பணியாற்ற என்னைப் பலரும் ஊக்குவித்தனர்,” என்று தெரிவித்தார்.

புற்றுநோய்க்குப் பின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பும் என்ற நினைப்பும் பொய்த்துப்போனதாகக் கூறிய ஆரத்தி, ஒரு சிறு உடல்நலப் பிரச்சினை வந்தாலும் பேரச்சம் தம்மைப் பீடித்துக்கொள்வதாகவும் சொன்னார்.

ஈராண்டுகால ‘ஹார்மோன் சிகிச்சையில்’ இருக்கும் இவர் தொடர்ந்து மனநல நிபுணரிடமும் ஆலோசனை பெறுகிறார். மனநலம் குறித்த ஆலோசனை பெறுவதில் பலருக்கும் மனத்தடை இருப்பதாகவும், அதனை விடுத்து உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ள வலியுறுத்துவதாகவும் சொன்னார் ஆரத்தி.

வளர்ந்து வரும் எழுத்தாளருமான இவர், தான் மீண்டு வந்த கதையையும், விரைவாக நோயைக் கண்டறிய வேண்டிய அவசியத்தையும் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்; மார்பகப் புற்றுநோய் அறநிறுவனத்துடன் இணைந்து புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் துடிப்புடன் ஈடுபடுகிறார்.

“விரைவில் நோயைக் கண்டறிந்தால் பெரும்பாதிப்புகளின்றி மீண்டு வரலாம் என்பதற்கு வாழும் சான்று நான். புற்றுநோய் யாருக்கும் வரலாம். சிங்கப்பூரில் சிறந்த சிகிச்சையும் ஆதரவும் இருக்கிறது. எனவே, அச்சமின்றி அனைத்துப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்,” என்று ஆரத்தி கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்