2030க்குள் அனைத்து ஐடிஇ மாணவர்களுக்கும் மதியுரைஞர்கள்

2030க்குள் அனைத்து ஐடிஇ மாணவர்களுக்கும் மதியுரைஞர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 1:42 pm

2 mins read

தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர்கள் அனைவரும் வரும் 2030க்குள் மதியுரைஞரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறமுடியும்.

ஆண்டுதோறும் 10,000 மதியுரை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை அமைகிறது.

ஐடிஇ மதியுரைக் கூட்டமைப்புத் திட்டம், பள்ளி வாழ்க்கையைக் கடக்கவும் வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகளை ஆராயவும் பணி உலகிற்குத் தயாராகவும் மாணவர்களை மதியுரைஞர்களுடன் இணைக்கிறது.

தேசிய இளையர் மன்றம் ஜூலையில் அறிவித்திருந்த எஸ்ஜி இளையர் திட்டத்தின்கீழ், 2030க்குள் ஆண்டுக்கு 20,000 மதியுரை வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமையும்.

ஐடிஇ, தேசிய இளையர் மன்றம், லாப நோக்கமற்ற ‘தி ஆஸ்ட்ரோநாட்ஸ் கலெக்டிவ்’ ஆகியவற்றின் கூட்டணியில் இத்திட்டம் அமைகிறது.

மாணவர்களை வாய்ப்புகளுடன் ஐடிஇ இணைக்கும். மாணவர்களுக்குத் தொடர்புக் கட்டமைப்புகள், வளங்கள், நிதியுதவியைத் தேசிய இளையர் மன்றம் வழங்கும்.

வியாழக்கிழமை (நவம்பர் 19) இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான், இன்றைய இளையர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத்தொழில் தெரிவுகள் அதிகம் உள்ளதால் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளத் தெரியாமல் இருக்கலாம் என்றார்.

“வேலை கிடைத்த பிறகும், நாங்கள் பேசிய இளையர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் எதிர்காலப் பொருளியலுக்குத் தேவையான திறன்களைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து கவலைப்படுகின்றனர்,” என்றார் அவர்.

மதியுரைஞர்கள், தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, மாணவர்களுக்கு அவரவரது பலம் என்னவென்று கண்டறிய உதவு முடியும். இதன்மூலம் மாணவர்கள் மாற்றங்களை அதிக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவ முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பல பங்காளிகள் இணைந்து, மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உதவ முன்வருமாறும் திருவாட்டி கோ கேட்டுக்கொண்டார்.

தமது மதியுரைஞரான நிக்கோல் பரந்தாமனுடன் மாணவர் முகம்மது ஷாஹித் கமால் (இடது).
தமது மதியுரைஞரான நிக்கோல் பரந்தாமனுடன் மாணவர் முகம்மது ஷாஹித் கமால் (இடது). - படம்: நிக்கோல் பரந்தாமன்

ஐடிஇ மாணவர் முகம்மது ஷாஹித் கமால், 24, ஊழியரணியில் அடியெடுத்து வைத்த சூழலில் மதியுரை மிகவும் உதவியாக இருந்ததாகக் கூறினார்.

மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனத்தில் தாம் பணியாற்றியபோது அவருக்கு பணியிடத் தொடர்புகளிலும் உதவி கேட்பதிலும் சிரமம் நிலவியது. அவருக்கு அரசாங்க ஊழியர் நிக்கோல் பரந்தாமன், 37, மதியுரைஞரானார்.

“அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்தார். அவர் அளித்த குறிப்புகளையும் பணியிடத்தில் பயிற்சி செய்தேன். அது எனக்கு நம்பிக்கையளித்தது,” என்றார் ஷாஹித்.

திட்டம் முடிந்தும் தொடர்ந்து தமது மதியுரைஞரிடமிருந்து ஆலோசனை பெற விரும்புவதாக அவர் கூறினார்.

“ஷாஹித்தின் முன்னேற்றத்தைப் பார்ப்பது, தமது சொந்த பிள்ளையின் வளர்ச்சியைப் பார்ப்பதுபோல மகிழ்சியளிக்கிறது,” என்றார் நிக்கோல்.

சில அமைப்புகள் பத்தாண்டுகளுக்கு மேலாக மாணவர்களுடன் பணியாற்றி, அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வாழ்க்கை மாற்றங்களுக்கும் உதவுவதாக ஐடிஇ தலைமை நிர்வாகி பீட்டர் லாம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்