ஃபோர்ட் கேனிங் பார்க், பெர்ல்ஸ் ஹில் சிட்டி பார்க் ஆகியவற்றுக்கிடையே தொடர்ச்சியான நடைபாதையை உருவாக்க, ரிவர்சைட் பாயின்ட், மேகசின் ரோட்டுக்கு அருகில் உள்ள மெர்ச்சன்ட் ரோட்டின் ஒரு பகுதி விரைவில் பாதசாரிகளின் பயன்பாட்டிற்காக மாற்றப்படும்.
இதற்கு முன்பிருந்த சென்ட்ரல் மால், சென்ட்ரல் ஸ்குவேர் கட்டடங்கள் இருந்த இடத்தில் ஒரு புதிய கட்டடத்தை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சொத்து நிறுவனமான சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (சிடிஎல்) மூலம் அந்த நடைபாதை உருவாக்கப்படும்.
மேற்கூறப்பட்ட இரு கட்டடங்களும் 2024ம் ஆண்டு முற்பகுதியில் இடிக்கப்பட்டன. அந்த இடத்தில் யூனியன் ஸ்குவேர் எனும் கட்டடத்தைக் கட்ட நகர மறுசீரமைப்பு ஆணையம், சிடிஎல் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மெர்ச்சன்ட் ரோட்டுக்கும் ஹெவ்லாக் ரோட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமையவிருக்கும் அந்தப் புதிய கட்டடத்தில் அலுவலகங்கள், கடைகள், குடியிருப்பு ஆகியவை இருக்கும்.
இரண்டு பழமைப் பாதுகாப்புக் கட்டடங்கள், ஒரு புதிய மூன்று மாடி ஹோட்டல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய யூனியன் ஸ்குவேர் கட்டடத்தின் கட்டுமானம் 2029ல் நிறைவுபெறும்.
மெர்ச்சன்ட் ரோட்டின் ஒரு பகுதி நடைபாதையானது யூனியன் ஸ்குவேர் கட்டடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்றும் இது பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்றும் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புதிய மேம்பாட்டில் வெளிப்புறப் பகுதி, பொதுவான இடங்கள் ஆகியவற்றுடன், ஃபோர்ட் கேனிங், பெர்ல்ஸ் ஹில் இடையேயான இணைப்பை மேம்படுத்த சாலமன் ஸ்திரீட்டின் ஒரு பகுதி நடைபாதையாக மாற்றப்படுவதும் அடங்கும் என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
ஒரு புதிய வீடமைப்புப் பேட்டையாக மாறும் பெர்ல்ஸ் ஹில்லில், பொது அடுக்குமாடி வீடுகள் உட்பட சுமார் 6,000 புதிய வீடுகள் இருக்கும். இது அடுத்த பத்தாண்டுகளில் கட்டப்படும்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில், பாதசாரிகள் ஃபோர்ட் கேனிங் பார்க்கிலிருந்து, பெர்ல்ஸ் ஹில் வரை செல்ல சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடக்க முடியும்.
இந்தப் பாதை, முன்னாள் லியாங் கோர்ட் கட்டடம் இருந்த இடத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் கென்னிங்ஹில் பியர்ஸ் கட்டடம் (CanningHill Piers), பாதுகாக்கப்பட்ட ஆர்ட் பிரிட்ஜ் பாலம், யூனியன் ஸ்குவேர், சின் சுவீ பொது வீடமைப்புப் பேட்டை ஆகியவற்றின் கடந்து செல்லும்.