தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிபிஎஸ் பேலா! திட்டத்தால் 50% வரை வருவாய் ஈட்டிய வர்த்தகர்கள்

2 mins read
679a47fd-0d59-417b-93e7-ea03b3194cc1
ஒவ்வொரு சனிக்கிழமையும் அக்கம்பக்கக் கடைகள், ஈரச் சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் பேலா! மூலம் கட்டணம் செலுத்தும் முதல் 160,000 சிங்கப்பூரர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் $3 வரையிலான ரொக்கம் திரும்ப தரப்படும். - படம்: டிபிஎஸ்

டிபிஎஸ்/ பிஓஎஸ்பி வங்கிகள் அறிமுகம் செய்த எஸ்ஜி60 ரொக்கம் திரும்ப பெறும் திட்டத்தில் பங்கேற்ற அக்கம்பக்க வர்த்தகங்கள் அவற்றின் வருமானம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு வரை உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளன.

வங்கியின் பேலா! எஸ்ஜி60 (PayLah! SG60) திட்டம் ஜூலை 12ஆம் தேதி அறிமுகம் கண்டது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டத்தில் பங்குபெறும் 22,000க்கும் அதிகமான அக்கம்பக்கக் கடைகள், ஈரச் சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் வங்கியின் பேலா! செயலி மூலம் கட்டணம் செலுத்தும் முதல் 160,000 சிங்கப்பூரர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் $3 வரையிலான ரொக்கம் திரும்ப தரப்படும். அந்தத் திட்டம் செப்டம்பர் 27 வரை நீடிக்கிறது.

திட்டத்தின் தொடக்கத்திலிருந்து சனிக்கிழமை ஆகஸ்ட் 14 நிலவரப்படி 400,000க்கும் அதிகமானோர் ரொக்கத்தைத் திரும்ப பெறும் 800,000 வெகுமதிகளைப் பெற்றுள்ளதாக வங்கி தெரிவித்தது.

2024ஆம் ஆண்டு வங்கி அறிமுகம் செய்த இதுபோன்ற திட்டம் மூலம் வர்த்தகர்கள் ஈட்டிய வருமானத்தைவிட இவ்வாண்டு ஈட்டிய வருமானம் கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகரித்தது.

ஈரச் சந்தைக் கடை உரிமையாளர்களே ஆக அதிக வருவாயை ஈட்டினர். பேலா மூலம் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மும்மடங்கானது. அவர்கள் செய்த செலவும் இரட்டிப்பானது.

மின்னிலக்கக் கட்டண முறையை வாடிக்கையாளர்கள் அதிகம் நாடுவதையும் அக்கம்பக்க கடைகளுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவையும் அது காட்டுவதாக டிபிஎஸ் வங்கி குறிப்பிட்டது.

ஒவ்வொரு முறையும் டிபிஎஸ் வங்கி ரொக்கத்தைத் திரும்ப பெறும் திட்டத்தைக் கொண்டுவரும்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைவதாக சில கடைக்காரர்கள் குறிப்பிட்டனர்.

ரொக்கத்தைத் திரும்ப பெறும் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே கடைகளில் கூட்டம் அலைமோதியதாகச் சொன்ன அவர்கள், மூத்த வாடிக்கையாளர்கள் பேலா செயலியின் பயன்பாட்டைக் கற்றுக்கொள்ள பிள்ளைகளையும் கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டனர்.

ஒட்டுமொத்தத்தில் அந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நல்ல பலன் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாட டிபிஎஸ்/ பிஓஎஸ்பி வங்கி $23 மில்லியன் மதிப்புள்ள திட்டத்தை அறிமுகம் செய்தது.

அதன் மூலம் வாழ்க்கைச் செலவினங்களையும் வர்த்தகச் செலவுகளையும் குறைக்க வங்கி திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்