சிங்கப்பூரின் பாய லேபாரில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) 36.2 டிகிரி செல்சியஸ் என அதிக வெப்பம் பதிவானது.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் மிகவும் சூடான டிசம்பர் என்ற நிலையை இந்த மாதம் பிடித்துள்ளது.
இதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே, டிசம்பர் மாதத்தின் ஆக வெப்பமான நாளாக இருந்து வந்தது.
டிசம்பர் மாதம் வெப்பமாக இருக்கும் வேளையில், இவ்வாண்டின் நவம்பர் மாதம் அதற்கு நேர்மாறாக மழை மிகுந்த மாதமாக வரலாற்றில் இடம்பிடித்தது.
அந்த மாதம் தீவு முழுவதும் பெய்த மழையின் சராசரி அளவு 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (NEA) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளது.
நவம்பர் மாதத்தின் நீண்டகால சராசரி அளவைக் காட்டிலும் 47.4 விழுக்காடு அதிகமான மழை இவ்வாண்டு நவம்பரில் பெய்தது.
இதற்கு முன்னர், 1992 நவம்பரில் 390.1 மில்லிமீட்டர் மழை பதிவானதே ஆக அதிகமாக இருந்தது.
இந்நிலையில், இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வாரியம் தனது வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.

