$120,000 மதிப்பிலான பொருள்களை நேப்பாளத்துக்கு அனுப்பும் ‘மெர்சி ரிலீஃப்’

$120,000 மதிப்பிலான பொருள்களை நேப்பாளத்துக்கு அனுப்பும் ‘மெர்சி ரிலீஃப்’

2 mins read
முதற்கட்டமாக 1,800 பேருக்கு அவசரகாலப் பொருள்கள் விநியோகிக்கப்படும்
8e008867-e3a9-4236-b44d-d689c7afdb21
சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளைச் சென்றடைய முடியாமல் 40க்கும் அதிகமான சாலைகளும் பாலங்களும் வெள்ளத்தில் கடுமையாகச் சேதமடைந்தன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சிங்கப்பூரின் மெர்சி ரிலீஃப் மனிதநேய அமைப்பு, $120,000 மதிப்புள்ள அவசரகால உதவியை நேப்பாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பவிருக்கிறது.

திடீர் வெள்ளத்தில் மூழ்கிய ரசுவா வட்டாரத்தில் உள்ள உத்தரகயா ஊராட்சி ஒன்றியத்துக்கு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு செல்லவிருக்கிறது.

இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிவரை அங்குத் தங்கியிருக்கும் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1,800 தனிநபர்களுக்கு நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்யும் என்று புதன்கிழமை (செப்டம்பர் 2) மெர்சி ரிலீஃப் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி, பனிப்பாறை சரிவால் நேப்பாள - திபெத் எல்லையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு கிராமங்களை அடித்துச்சென்ற அந்த வெள்ளத்தில் குறைந்தது 1,000 பேர் உயிரிழந்ததுடன் 4,000 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமற்போனோரில் 590 பேர் வெளிநாட்டினர். அவர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள்.

மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோரைச் சென்றடைய முயல்கின்றனர்.
மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோரைச் சென்றடைய முயல்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

திரி‌ஷுலி, போதேகோ‌‌‌ஷி ஆறுகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.

ஏறக்குறைய 40 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுடைய சாலைகள் சேதமுற்றதுடன் 40க்கும் அதிகமான பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று மெர்சி ரிலீஃப் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டோரின் தேவைகளை அறிந்துகொள்ள நேப்பாளத்தில் உள்ள உள்ளூர் பங்காளிகளுடன் மெர்சி ரிலீஃப் இணைந்து செயல்படுகிறது.

உணவு, உடை, குடிநீர், சுகாதாரப் பொருள்கள், போர்வைகள் ஆகியவற்றை தொடக்கக் கட்டமாக நேப்பாளத்துக்கு அனுப்பிவைக்க அமைப்பு திட்டமிடுகிறது.

சாலை இணைப்புகள் மேம்படும்போது அருகில் உள்ள பிற பகுதிகளில் உள்ளோருக்குக் கூடுதல் நிவாரணப் பொருள்கள் பின்னர் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேப்பாளத்தில் தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளில் கைகொடுக்க சிங்கப்பூர் மனிதநேய பொருள்களையும் அதிகாரிகளையும் அங்கு அனுப்புவதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதற்குமுன் சொன்னது.

குறிப்புச் சொற்கள்