ஒன் ஃபுல்லர்ட்டன் பகுதியில் இருக்கும் மெர்லயன் பூங்காவில் அமைந்துள்ள மெர்லயன் சிலை, வரும் பிப்ரவரி மாதம் 11, 12ஆம் தேதிகளில் சுத்தம் செய்யப்படும், பழுதுபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அவ்விரு நாள்களிலும் அங்கு படமெடுத்துக்கொள்ள முடியாது. சுத்திகரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது மெர்லயன் சிலை மூடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமையன்று (ஜனவரி) அறிவித்தது.
அந்தக் காலகட்டத்தில் மெர்லயன் பூங்காவில் உள்ள மெர்லயன் குட்டி சிலையுடன் பொதுமக்கள் படமெடுத்துக்கொள்ளலாம் என்று கழகம் குறிப்பிட்டது.
“அந்நாள்களில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளும் அங்கு போடப்படும் தடுப்புகளும் அசெளகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று பயணத்துறைக் கழகம் கூறியது.
பாதி சிங்கம், பாதி மீன் உருவங்களைக் கொண்டுள்ள மெர்லயன் சிலை ஒரு நீரூற்றாகவும் இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அதில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதிவரை பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
8.6 மீட்டர் உயரமும் 70 டன் எடையும் கொண்ட மெர்லயன் சிலை, முதலில் சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே வைக்கப்ப்டடிருந்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் யூ 1972ஆம் ஆண்டில் அதைத் திறந்து வைத்தார்.