சிங்கப்பூரில் ‘மியூஸ்’ (Muse) என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதன் மூலம், உணவகங்களில் மேசையை முன்பதிவு செய்வது, விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது, நண்பர்களுடன் வெளியே செல்வதை ஒருங்கிணைப்பது அல்லது இணையக் கடைகளில் காலணிகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது என அனைத்தும் உரையாடல் மூலமாகவே சாத்தியமாகிறது.
சிங்கப்பூர் பயனர்கள் இந்தச் செயலியை புதன்கிழமை (அக்டோபர் 28) முதல் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகல் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இதன் மூலம், பொதுவான பயனீட்டாளர் சந்தைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் தனிநபர் செயற்கை நுண்ணறிவு மென்பொருளாக மியூஸ் உருவெடுத்துள்ளது. இதனை இணையச் மூலமாகவும் பயன்படுத்த முடியும்.
அண்மைய காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபன்ஏஐ-யின் டாட்ஸ், ஓபன்-சோர்ஸ் ஓபன்கிளா போன்ற பிரபலமான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள், அலுவலக உற்பத்தித்திறன், மென்பொருள் மேம்பாட்டிலேயே அதிகக் கவனம் செலுத்தின.
ஆனால், மியூஸ் அவ்வாறு அமையவில்லை.
செப்டம்பர் 8ஆம் தேதி அமெரிக்கா, கனடாவில் அறிமுகமாகி, தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி ஜப்பானில் களமிறங்கியதைத் தொடர்ந்து, தற்போது சிங்கப்பூரிலும் மியூஸ் அறிமுகமாகியுள்ளது.
“அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட உங்களின் தனிப்பட்ட ஏஜென்ட்தான் மியூஸ்,” என்று அக்டோபர் 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மெட்டா சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் நிக்கல் டான் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் வேலைகளைச் சுமுகமாகக் கையாளவும் அவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் நீண்டகால இலக்குகளைச் செயல்படுத்தக்கூடிய திட்டங்களாக மாற்றவும் இந்தச் செயலி உதவுகிறது என்று மெட்டா தெரிவித்துள்ளது.
மியூஸ் வாராந்திர பயன்பாட்டு வரம்புடன் இலவசமாக வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான மக்களின் தேவைகளுக்குப் போதுமானது என மெட்டா குறிப்பிட்டுள்ளது.
அதிக அளவிலான பணிகளைச் செய்ய விரும்புவோர், கூடுதல் மியூஸ் டோக்கன்கள் அல்லது கிரெடிட்டுகளைப் பெற $22 முதல் $139 வரையிலான சந்தா திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.
பயனர்களின் சார்பாகப் பணிகளைச் செய்வதற்கோ அல்லது சந்திப்புகள் குறித்த நினைவூட்டல்களை அனுப்புவதற்கோ, ஜிமெயில், இன்ஸ்டகிராம், காலெண்டர் போன்ற இணையக் கணக்குகளில் உள்ள தரவை அணுக மியூஸுக்குப் பயனர்கள் அனுமதி வழங்க வேண்டும்.
