$9.5 பில்லியன் முதலீட்டில் புதிய சில்லுத் தொகுப்பு வளாகம்

2 mins read
1,400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அறிவிப்பு
aa3a4b89-effa-435b-8718-40e3dca21963
தொடக்க விழா நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், மைக்ரான் டெக்னாலஜிஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகியோருடன் பிற பேராளர்கள். - படம்: மைக்ரான் சிங்கப்பூர்
multi-img1 of 2

பகுதி மின்கடத்தி நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ், சிங்கப்பூரில் ஏறத்தாழ 9.5 பில்லியன் வெள்ளி முதலீட்டில் புதிய சில்லுத் தொகுப்பு வளாகத்தை அமைக்கவிருக்கிறது.

அதற்கான கட்டுமானம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இத்தகைய தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் முதல் வளாகமாக இது அமையும்.

கட்டுமானம் முடிந்து 2026ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கவுள்ள இந்த வளாகம் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் புத்தாக்கத்தைக் கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 8ஆம் தேதி அந்நிறுவன அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“செயற்கை நுண்ணறிவு உலகில், தகவல் சேமிப்பின் தேவை இன்றியமையாதது,” என்று குறிப்பிட்ட மைக்ரான் டெக்னாலஜிஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் மெஹ்ரோத்ரா, அந்நிறுவனம் ‘எச்பிஎம்’ எனும் நகக்கண் அளவேயுள்ள பகடைக்காய் போன்ற சேமிப்புச் சாதனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.

“இது செயற்கை நுண்ணறிவுத் தகவல் மையங்களில் பெரும் துணை புரியும்,” என்று சொன்ன அவர், இந்த விரிவாக்கம் தொடக்கத்தில் 1,400 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மூவாயிரமாக உயரும் என்றார் அவர்.

மைக்ரான் நிறுவனம் சிங்கப்பூரில் இதுவரை 40 பில்லியன் வெள்ளி முதலீடு செய்துள்ளதைச் சுட்டினார் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்.

அந்நிறுவனத்தின் உயர்தொழில்நுட்பச் சில்லு வகையின் (NAND chip) முதன்மை உற்பத்தி இடமாகச் சிங்கப்பூர் திகழ்வதாகவும் அவர் சொன்னார்.

“தற்போது இந்தப் புதிய ‘எச்பிஎம்’ தொழில்நுட்பம் தகவல் சேமிப்புத் தீர்வுகளை வடிவமைக்கும் சிறந்த நிறுவனமாக மைக்ரானை மாற்றும்”, என்றார் அவர்.

பகுதி மின்கடத்தித் துறை சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எட்டு விழுக்காடு பங்களிப்பதாகச் சொன்ன திரு கான், சிங்கப்பூரில் புத்தாக்கம் சார்ந்த பொருளியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல இத்தகைய முதலீடுகள் உதவும் என்றார்.

குறிப்புச் சொற்கள்