மைக்ரோசாஃப்ட் சேவைத் தடை; சிங்கப்பூர் வங்கிகள் பாதிப்பு

மைக்ரோசாஃப்ட் சேவைத் தடை; சிங்கப்பூர் வங்கிகள் பாதிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 7:47 pm

1 mins read

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய சேவைகள் பேரளவில் முடங்கின. மின்னஞ்சல், மேகக் கணினிச் சேமிப்பு உள்ளிட்ட பல கருவிகள் செயல்படவில்லை. இதனால் சிங்கப்பூரில் உள்ள வங்கிகளும் பாதிக்கப்பட்டன.

வாடிக்கையாளர் சேவை அவசர எண்கள், உறவு மேலாளர்கள் வழியாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவிவருகின்றன.

இந்த நிலவரத்தைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. அதன் மின்னஞ்சல் சேவைகளும் தடைபட்டுள்ளன. எனினும் முக்கியச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வங்கிகள் இணையத்தளங்கள் உள்ளிட்ட பல வழிகளில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்தது.

டிபிஎஸ், யுஓபி, எச்எஸ்பிசி, மேபேங்க் சிங்கப்பூர் ஆகிய வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேவை முடக்கம் தொடர்பாக அறிமுகமில்லாத இணைப்புகள், குறுஞ்செய்திகளை அழுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இவை மோசடிகள், தகவல் திருட்டு, நச்சு நிரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ், மின்னஞ்சல்களுக்கான பதில்கள் தாமதமாகும் என்று தெரிவித்தது.

எனினும் டிபிஎஸ் வாடிக்கையாளர்கள் ‘ஏடிஎம்’கள், கடன் அட்டைகள் வழியாகத் தொடர்ந்து பரிவர்த்தனைகளைச் செய்யலாம். டிபிஎஸ் இணையச் சேவை, பிஓஎஸ்பி டிஜிபேங்க், ‘பேலா’ சேவைகள் பாதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்