அரசாங்கத்துக்கான ‘மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்’ சேவைகள் முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான ‘கவ்டெக்’ சனிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளது.
“நவம்பர் 13ஆம் தேதி இரவு 11 மணிமுதல் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கான ‘மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்’ (Microsoft Outlook) சேவைகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று ‘கவ்டெக்’ பேச்சாளர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
உலகளவில் நூறாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்த மைக்ரோசாஃப்ட் சேவைத் தடை ஏற்பட்ட மறுநாள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம், சிங்ஹெல்த், சிங்கப்பூர் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசாங்க ஆணைபெற்ற கழகங்களும் அரசாங்க அமைப்புகளும் தங்கள் மின்னஞ்சல் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக நவம்பர் 13ஆம் தேதி இரவு, நவம்பர் 14ஆம் தேதி காலை வெளியிட்ட தனித்தனி ஃபேஸ்புக் பதிவுகளில் குறிப்பிட்டன.
டிபிஎஸ், யுஓபி, மேபேங்க் போன்ற வங்கிகளும் மின்னஞ்சல் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதாகத் தங்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கங்களில் தகவல் வெளியிட்டன.
‘ஃபார்ம்எஸ்ஜி’ (FormSG) தளம் வழியாகச் சமர்ப்பிக்கப்படும் சேவை விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நவம்பர் 14ஆம் தேதி பிற்பகல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் ‘மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்’ சேவையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த புகார்களின் எண்ணிக்கை நவம்பர் 13ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் 1,135 என உச்சத்தைத் தொட்டது. அதே நாளில் இரவு 8.45 மணியளவில் அது படிப்படியாகக் குறைந்து 347ஆகப் பதிவானது.
தனியார், கல்வித் துறைகளும் அந்தச் சேவைத் தடையால் பாதிக்கப்பட்டிருந்தன. இங்குள்ள வங்கிகளின் முக்கிய வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாதபோதிலும், மின்னஞ்சல் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டதாக வங்கிகள் தெரிவித்திருந்தன.
மேலும், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மின்னஞ்சல் சேவைகளும் அந்தத் தடையால் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்தப் பிரச்சினைக்கும் இணைய அல்லது ஏஐ மென்பொருள் செயலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ‘மைக்ரோசாஃப்ட்’ தெளிவுபடுத்தியுள்ளது.
“முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புக் கொள்ளளவு மேம்பாட்டு நடவடிக்கையின்போது ஏற்பட்ட கோளாற்றால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது,” என்றும் அது தெரிவித்தது.
