மத்திய கிழக்கு விவகாரம்: கத்தார் தலைவருடன் பிரதமர் வோங் பேச்சு

மத்திய கிழக்கு விவகாரம்: கத்தார் தலைவருடன் பிரதமர் வோங் பேச்சு

2 mins read
06085e4c-6136-41b3-87d4-04eba673d6ea
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் (உள்படம்) பிரதமர் லாரன்ஸ் வோங் மார்ச் 8ஆம் தேதி தொலைபேசிவழி பேசினார். - படம்: ஃபேஸ்புக்/பிரதமர் அலுவலகம்
Google News Preferred Icon

மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பில் கத்தார் அமீருடன் தொலைபேசிவழி பேசியதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் மோதல் தொடங்கி பத்து நாள்களாகிவிட்டன. அம்மோதல் ஈரானை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் வேகமாக மாறிவரும் சூழல் குறித்து கத்தார் அமீரிடம் பிரதமர் வோங் கேட்டறிந்தார்.

மத்திய கிழக்கில் மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், வேகமாக மாறிவரும் சூழ்நிலை குறித்து கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தொலைபேசிவழி கலந்துரையாடியதாகப் பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மோதல் நீடிப்பது அவ்வட்டாரத்திற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த அனைத்துலகச் சமூகத்திற்கும் கடுமையான அபாயங்களை ஏற்படுத்தும். அண்மைக்கால நிலவரங்கள் குறித்த தகவல்களை கத்தார் அமீர் என்னுடன் பகிர்ந்துகொண்டார். பதற்றத்தைத் தணிக்கவும், அந்த வட்டாரத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுவரும் அரசதந்திர முயற்சிகளுக்குச் சிங்கப்பூரின் ஆதரவை அவரிடம் தெரிவித்துக்கொண்டேன்,” என்று திரு வோங் கூறியுள்ளார்.

“சிங்கப்பூரர்களின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். கத்தாரிலுள்ள சிங்கப்பூரர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் அமீருக்கும் கத்தார் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டேன். இருதரப்பு அதிகாரிகள் இணைந்து பணியாற்றி, குடிமக்களின் நலனை உறுதிசெய்வதுடன் தேவையான பயண ஏற்பாடுகளையும் கவனித்து வருகின்றனர்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தாருடன் கொண்டுள்ள வலுவான உறவைச் சிங்கப்பூர் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்தச் சவாலான காலகட்டத்தில் தொடர்ந்து அணுக்கமாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்லாரன்ஸ் வோங்கத்தார்மத்திய கிழக்குஈரான்இஸ்ரேல்அமெரிக்காசண்டை